அக்டோபர் 7 தாக்குதலில் ‘பாலஸ்தீன ஐநா’ அதிகாரிகளுக்கு தொடர்பு.? இஸ்ரேல் கடும் குற்றசாட்டு.!
கடந்த 2023 அக்டோபர் 7ஆம் தேதி பாலஸ்தீன ஆதரவு அமைப்பான ஹாமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 1100 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்ததில் பெரும்பாலும் பொதுமக்களே அதிகம் என இஸ்ரேலிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலின் போது சுமார் 250 பேரை பிணை கைதிகளாக ஹமாஸ் அமைப்பினர் கடத்தி சென்றனர். அவர்களில் பலர் விடுவிக்கப்பட்டுவிட்டனர்.
ஹமாஸ் தாக்குதலை அடுத்து இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் அமைப்பினர் அதிகம் இருக்கும் பாலஸ்தீன நாட்டின் காசா நகரில் தொடர் தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதலில் இதுவரை 26 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இதில் 70 சதவீதம் பேர் பெண்கள், குழந்தைகள், வயதானோர் என்றும் ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது.
ரஷ்ய விமானம் விபத்துக்குள்ளானதில் 74 பேர் உயிரிழப்பு..!
தற்போது வரையில் காசா நகரில் அவ்வப்போது தாக்குதல் தொடர்ந்து வரும் வேளையில், போரில் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களை மீட்டு அவர்களுக்கு தஞ்சம் அளித்து உதவி செய்து வரும் ஐநாவின் ஒரு பகுதியான UNRWA அமைப்பானது, அண்மையில் UNRWA அதிகாரிகள் சிலரை இடைநீக்கம் செய்துள்ளது.
அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் UNRWA ஊழியர்கள் சிலருக்கு தொடர்பு இருப்பதாக மிக பெரிய குற்றசாட்டு எழுந்தது. இந்த குற்றசாட்டை அடுத்து இஸ்ரேல் உட்பட பல்வேறு நாடுகள் எதிர்ப்பை வெளிப்படுத்தியதோடு, UNRWA அளிக்கும் நிதியையும் நிறுத்துவதாக அறிவித்தனர்.
இந்த பிரச்சனை குறித்து தான் UNRWA அமைப்பு, குறிப்பிட்ட சில அதிகாரிகளை இடைநீக்கம் செய்துள்ளது. இந்த விவகாரம் குறித்து பதிலளிக்கும் விதமாக, ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கூறுகையில், “UNRWA மீதான குற்றசாட்டு குறித்து அவசர மற்றும் விரிவான விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்தார் என்று அவரது செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் கூறினார்.
இந்த விவகாரத்தை தொடர்ந்து, UNRWAக்கு தற்காலிகமாக நிதி அளிப்பதை இடைநிறுத்தியுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. அதே போல ஆஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகளும் UNRWA ஏஜென்சிக்கான நிதியுதவியை நிறுத்திவிட்டதாக தெரிவித்துள்ளன.
இந்த விவகாரம் குறித்து, இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் காட்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிடுகையில், அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல்களில் UNRWA ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டுகள் ஆழ்ந்த கவலையளிக்கின்றன. இந்த விவகாரம் குறித்து நாங்கள் எங்கள் நட்பு நாடுகளுடன் பேசுவோம். UNRWA அமைப்பிற்கு நிதி வழங்குவதை தற்காலிகமாக இடைநிறுத்துவோம் என்று தெரிவித்துள்ளார்.