“சீக்கிரம் வருகிறோம்”…சுனிதா வில்லியம்ஸை அழைத்து வர ராக்கெட் புறப்பட்டது!
அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி நிலையத்தில் இருந்து ராக்கெட் புறப்பட்டது.

வாஷிங்டன் : நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து Crew-10 மிஷனை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளனர்.கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் விண்கலம் மூலம் விண்வெளிக்கு சென்றிருந்த நிலையில், அவர்களை மீட்பதற்காக Crew-10 மிஷனை விண்ணில் செலுத்தியுள்ளனர். சுனிதா வில்லியம்ஸ் சென்ற விண்கலம் பழுது ஏற்பட்டதன் காரணமாக விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டடு 9 மாதங்களுக்கு மேலாகியும் அங்கு தான் சிக்கியிருக்கிறார்கள்.
அங்கு சிக்கி இருந்த இவர்களை மீட்க நாசா உடன் இணைந்து எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் இணைந்து அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நாசாவுடன் இணைந்து கடந்த மார்ச் 13-ஆம் தேதி விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அன்று க்ரூ டிராகன் ராக்கெட் ஏவுதளத்தில் (Launch Pad) உள்ள ஹைட்ராலிக் இயந்திரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், மிஷன் தற்காலிகமாக தேதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து இதனை சரி செய்யும் பணியில் நாசாவும், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனமும் மும்மரமாக வேலை செய்து வந்தது. இப்போது இறுதியாக அதற்கான வேலைகள் முடிந்த நிலையில், சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள சுனிதா வில்லியம்ஸை அழைத்து வர ராக்கெட் புறப்பட்டது. புளோரிடாவில் இருந்து புறப்பட்ட க்ரூ டிராகன் விண்கலத்தில் அன் மெக்லெய்ன் (நாசா), நிக்கோல் ஏயர்ஸ் (நாசா), டாகுயா ஓனிஷி (ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் – ஜாக்சா), கிரில் பெஸ்கோவ் (ரோஸ்கோஸ்மோஸ் – ரஷியா) என மொத்தம் 4 பேர் பயணம் செய்துள்ளனர்.
இந்த ராக்கெட் இன்றிரவு 11.30 மணியளவில் ஐ.எஸ்.எஸ்.-சுக்கு சென்றடைந்ததும் Crew-9 குழுவினர் மற்றும் (சுனிதா வில்லியம்ஸ், பாரி வில்மோர், நிக் ஹேக், அலெக்சாண்டர் ஸ்கோர்ட்சோவ்) பூமிக்கு திரும்புவர். இருவரும் வரும் மார்ச் 19 அன்று அவர்கள் SpaceX Crew Dragon மூலம் பூமிக்கு பத்திரமாக தரையிறக்கப்படுவார்கள் எனவும் கூறப்படுகிறது.