அமெரிக்கா விதித்த 245% வரி., சீனாவின் ரியாக்சன் என்ன?
அமெரிக்கா தொடர்ந்து வரிகளை உயர்த்தி வந்தால், அந்த விவகாரத்தில் நாங்கள் கவனம் செலுத்த மாட்டோம் என சீன வெளியுறவுத்துறை குறிப்பிட்டுள்ளது.

சீனா : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அயல்நாட்டு பொருட்களுக்கான பரஸ்பர வரி விதிப்பை அண்மையில் அறிவித்தார். அதனை தொடர்ந்து சீனா அதற்கு எதிர்வினை ஆற்ற, அதற்கு பதிலுக்கு அமெரிக்கா கூடுதல் வரி விதிக்க என இரு நாடுகளும் தொடர்ந்து மாறி மாறி வரி விதிப்புகளை வாரி வழங்கி வருகின்றன.
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தற்போது 245% வரை வரி விதிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. இது அமெரிக்கா-சீனா இடையேயான வர்த்தகப் போரை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. முதலில் 84%, பின்னர் 145% ஆக உயர்ந்த இந்த வரி, மருத்துவ ஊசிகள் போன்ற சில பொருட்களுக்கு 245% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
வரி விதிப்புக்கு பதிலடி கொடுப்பது போல சீனா உறுதியாக செயல்பட்டு வந்த சூழலில் சீனா, அமெரிக்கப் பொருட்களுக்கு 125% வரி விதித்து (ஏப்ரல் 11, 2025), ஹாலிவுட் படங்களுக்கு கட்டுப்பாடு, அரிய மண் உலோகங்கள், காலியம் ஏற்றுமதி தடை செய்து பதிலடி கொடுத்திருந்தது.
இந்த வரி விதிப்புகளை அடுத்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் கூறுகையில், “அமெரிக்கா வரி விதிப்பு மூலம் மிரட்டுவதை நிறுத்தி, இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும். அமெரிக்காவின் வர்த்தகப் போருக்கு நாங்கள் பயப்பட மாட்டோம்.” என்றார்.
மேலும், ” அமெரிக்கா தொடர்ந்து வரிகளை உயர்த்தி கட்டண எண்கள் விளையாட்டை தொடர்ந்து விளையாடி வந்தால், அந்த விவகாரத்தில் நாங்கள் கவனம் செலுத்த மாட்டோம் என்று சீனா வெளியுறவுத்துறை சார்பில் கூறப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.