வலுக்கும் வரி போர்: அமெரிக்காவுக்கு பதிலடியாக 84% வரி விதித்த சீனா.!
அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவுகள் இதுவரை இல்லாத அளவுக்குக் குறைந்த நிலையில் உள்ளன.

சீனா : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற நாடுகள் என்ன இறக்குமதி விதிக்கிறதோ, அதனை கணக்கிட்டு அந்தந்த நாடுகளில் இருந்து அமெரிக்காவில் பொருட்கள் அமெரிக்காவில் இறக்குமதி ஆகும் போதும் அதே அளவு வரி இருக்கும்படி புதிய வரி விதிப்பை அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.
இந்த நிலையில், அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தகப் போர் தற்போது மேலும் தீவிரமடைந்துள்ளது. ஆம், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 104 சதவீத வரி விதிப்பை அமல்படுத்தியதற்கு பதிலடியாக, சீனா அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் தற்போதைய 34 சதவீத வரியை 84 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
இந்த புதிய வரி உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. இந்த புதிய வரி விதிப்பானது அமெரிக்கா – சீனா இடையே வர்த்தக போரை எழுப்பியுள்ளது. இது உலக வர்த்தகத்தை பாதிக்கும் சூழல் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், அமெரிக்காவின் எந்த வகையிலான போரையும் எதிர்கொள்ளத் தயார் என்றும் பதிலடி கொடுத்துள்ளது.
சீனாவின் இந்த 84 சதவீத வரி உயர்வு அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் அனைத்து பொருட்களுக்கும் பொருந்தும். இந்த வர்த்தகப் போர் உலகின் மிகப்பெரிய இரு பொருளாதாரங்களுக்கு இடையிலான உறவை மேலும் சிக்கலாக்கியுள்ளது. அமெரிக்காவும் சீனாவும் தங்கள் நிலைப்பாடுகளில் இருந்து பின்வாங்குவதற்கான அறிகுறிகள் தென்படாத நிலையில், இதன் தாக்கம் உலக பொருளாதாரத்தில் நீண்ட காலம் எதிரொலிக்கலாம் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.