ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது! அதிபருக்கே தடை போட்ட தென் கொரியா!
தென் கொரியாவின் ஊழல் விசாரணைத் தலைவர் இராணுவச் சட்ட ஆணையின் பேரில் அதிபர் யூனுக்கு பயணத் தடை விதித்து உத்தரவிட்டார்.
சியோல் : அடுத்த ஆண்டு தாக்கல் செய்யப்பட உள்ள நிதிநிலை அறிக்கை சட்ட மூலம் குறித்து ஆளும் மக்கள் சக்தி கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. எனவே, தேச விரோத சக்திகளை ஒழிக்க அவசரநிலை இராணுவ சட்டம் கொண்டுவரப்படுகிறது என்று அதிபர் யூன் சூக் இயோல் அறிவித்தார்.
எதிர்க்கட்சிகள் வட கொரியாவிற்கு ஆதரவாக செயல்படுகிறது மற்றும் அரசை அதன் கடமையை செய்யவிடாமல் தடுக்கிறது அதன்காரணமாக இப்படியான அவசரநிலை சட்டம் கொண்டு வரப்பட்டதாகவும் அவர் அறிவித்தது தென் கொரியா மக்களை மிகவும் கோபமடைய செய்து எதிர்புகளை கிளம்புவதற்கு ஒரு காரணமாக அமைந்தது.
இதனையடுத்து, அதிபர் பதவி விலகக் வேண்டும் என்று அந்நாட்டில் மக்கள் கடுமையான போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். போராட்டங்களும் எதிர்ப்புகளும் அதிகமாக வந்த காரணத்தால் பதறிப்போன அதிபர் யூன் சூக் இயோல் சில தினங்களுக்கு முன்பு ” இந்த முடிவு மக்களை கவலை அடைய செய்துள்ள்ளது எனக்கு தெரிகிறது. எனவே, அவர்களுக்கு பெரும் சிரமத்தை கொடுத்ததற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ராணுவ ஆட்சி அமல்படுத்தியதிற்கு என்னை மன்னித்து விடுங்கள்.இனிமேல் அமல்படுத்த மாட்டேன்” என பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டார்.
அப்படி மன்னிப்பு கேட்டாலும் கூட எதிர்ப்புகளும், போராட்டங்களும் நின்றபாடு இல்லை. தென் கொரியர்களில் 73.6% பேர் அவருடைய பதவி நீக்கத்தை ஆதரிப்பதாக சமீபத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது எனவும் செய்தி நிறுவனங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளது.
அதைப்போல, நாட்டிற்கு எதிராக களங்கம் விளைவிக்கும் விதமாக ராணுவச் சட்டத்தை அவர் அறிவித்ததாக கூறி குறித்துச் சிறப்பு மன்ற விசாரணை நடத்தப்படவேண்டும் என்று எதிர்க்கட்சி புகார் அளித்தது மட்டுமின்றி நீதிமன்றத்தில் கொடுப்பதற்கு அதற்கான மனுவையும் தயார் செய்து வைத்துள்ளனர். அதற்கான மசோதாவை வரும் வியாழக்கிழமை (12 டிசம்பர்) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.
இதனையடுத்து, அவர் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்படுமா? என கேள்விகள் எழும்பிய நிலையில், தடைவிதிக்க போலீசார் பரிசீலனை செய்துள்ளது. இந்த சூழலில், தென் கொரியாவின் ஊழல் விசாரணைத் தலைவர், டிசம்பர் 9 இன்று இராணுவச் சட்ட ஆணையின் பேரில் அதிபர் யூனுக்கு வெளிநாட்டு பயணத் தடை விதித்து உத்தரவிட்டார்.
இப்படியான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள காரணத்தால் அதிபர் யூன் சூக் இயோல் வெளிநாடுகளுக்கு செல்லமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இந்த தடை உத்தரவு காரணமாக யூன் சூக் இயோல் வெளிநாடுகளுக்கு செல்லவிருந்த சுற்றுப்பயணங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.