கனடா தேர்தல் : 22 பஞ்சாபியர்கள், 2 ஈழ தமிழர்கள் வெற்றி!
கனடா நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளது. அதில், 22 பஞ்சாபியர்கள் மற்றும் 2 ஈழதமிழர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

ஒட்டாவா : 343 தொகுதிகளை கொண்ட கனடா நாடாளுமன்றத்திற்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. அமெரிக்காவை போலவே கனடாவிலும் தேர்தல் வாக்கெடுப்பு முடிந்தவுடனேவாக்கு எண்ணிக்கையும் உடனடியாக தொடங்கிவிடும். 343-ல் 172 தொகுதிகளை வென்று இருந்தால் பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றலாம்.
கனடாவில் 2015 முதலே லிபரல் கட்சி தான் ஆட்சியில் இருந்து வருகிறது. பல்வேறு அரசியல் மாற்றத்தை அடுத்து கடந்த 2024 டிசம்பரில் அப்போதைய பிரதமர் ட்ரூடோராஜினாமா செய்ய, அதன் பிறகு லிபரல் கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்ட மார்க் கார்னி பிரதமராக அறிவிக்கப்பட்டார். அவரின் வேண்டுகோளுக்கு இணங்கவே கனடா நாடாளுமன்ற தேர்தல் முன்னதாக நடைபெற்றது.
தற்போது முன்னணி நிலவரங்கள் மற்றும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதில், ஆளும் லிபரல் கட்சி முன்னணி வகித்து வருகிறது. அனால் பெரும்பாண்மை பெரும் அளவுக்கு முன்னணியில் இல்லை என்ற நிலை தான் தற்போது நிலவுகிறது.
கனடாவில் வெளிநாடு வாழ் இந்தியர்களில் பஞ்சாபியினர் அதிகம். அதனால் அங்கு வெளிநாடு வாழ் பஞ்சாபிகள் தேர்தலில் குறிப்பிடத்தக்க இடங்களை கைப்பற்றுவது வழக்கமான ஒன்று தான். இதற்கு முன்னர் 2019-ல் 20 பஞ்சாபியர்களும், 2021 தேர்தலில் 18 பஞ்சாபியர்களும் தேர்தலில் வெற்றி பெற்றனர்.
இந்த முறை 16 பஞ்சாபி எம்பிக்கள் தேர்தலில் போட்டியிட்டனர். அதில், பலர் வெற்றி பெற்றனர். அதேபோல பல்வேறு இடங்களில் பஞ்சாபியினர் இடையே நேரடி போட்டி நிலவியது. மொத்தம் 65 பஞ்சாபியர்கள் போட்டியிட்டனர். அதில் 22 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
பஞ்சாப் வம்சாவளியைச் சேர்ந்த முக்கிய லிபரல் கட்சி வெற்றியாளர்கள், ஓக்வில் கிழக்கிலிருந்து அனிதா ஆனந்த், வாட்டர்லூவிலிருந்து பர்திஷ் சாகர், டோர்வல் லாச்சினிலிருந்து அஞ்சு தில்லான், சர்ரே நியூட்டனைச் சேர்ந்த சுக் தலிவால், மிசிசாகா மால்டனைச் சேர்ந்த இக்விந்தர் சிங் கஹீர், சர்ரே மையத்திலிருந்து ரந்தீப் சராய், ஃப்ளீட்வுட் போர்ட் கெல்ஸிலிருந்து குர்பாக்ஸ் சைனி, ஸ்டீவ்ஸ்டனின் ரிச்மண்ட் கிழக்கிலிருந்து பரம் பெய்ன்ஸ் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
பஞ்சாப் வம்சாவளியைச் சேர்ந்த கன்சர்வேடிவ் கட்சி வெற்றியாளர்களில் கால்கரி கிழக்கிலிருந்து ஜஸ்ராஜ் ஹாலன், கால்கரி மெக்நைட்டிலிருந்து தல்விந்தர் கில், கால்கரி ஸ்கைவியூவிலிருந்து அமன்பிரீத் கில், ஆக்ஸ்போர்டிலிருந்து அர்பன் கன்னா, எட்மண்டன் கேட்வேயிலிருந்து டிம் உப்பல், மில்டன் கிழக்கிலிருந்து பர்ம் கில், அபோட்ஸ்ஃபோர்ட் சவுத் லாங்லியிலிருந்து சுக்மான் கில், எட்மண்டன் சவுத் எஸ்டேட்டிலிருந்து ஜக்சரண் சிங் மஹால் மற்றும் வின்ட்சர் வெஸ்டிலிருந்து ஹார்ப் கில் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
அதேபோல, ஹரி அனந்த சங்கரி, யுவனிதா நாதன் ஆகிய இரண்டு ஈழத்தமிழர்கள் வெற்றி பெற்றுள்ளனர். ஆளும் லிபெரல் கட்சித் 168 இடங்களையும், கன்சர்வேட்டிவ் கட்சி 144 இடங்களிலும் முன்னணியில் உள்ளது. இதனால் லிபரல் கட்சி கடந்த தேர்தலை போலவே இந்த முறையும் சிறுபான்மை ஆட்சியை அமைக்க உள்ளது. பிரதமராக மார்க் கார்னி ஆட்சிப்பொறுப்பில் அமர உள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
கனடா தேர்தல் : 22 பஞ்சாபியர்கள், 2 ஈழ தமிழர்கள் வெற்றி!
April 29, 2025