எலான் மஸ்கின் ‘எக்ஸ்’க்கு தடை விதித்தது பிரேசில்! காரணம் என்ன?
உலகின் அதிக பயனர்களை கொண்ட 'எக்ஸ்' சமூக தளத்திற்கு பிரேசில் நாட்டின் உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
பிரேசில் : உலகின் கோடீஸ்வர தொழிலதிபர்களில் ஒருவரான எலான் மஸ்க்கின் சமூகத்தளமான ‘எக்ஸ் (X)’ தளத்திற்கு தற்காலிமாக பிரேசில் நாடு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
எலான் மஸ்க், பிரேசில் இடையேயான சர்ச்சை ..!
இந்த ஆண்டில் கடந்த ஏப்ரல் மாதத்தில், பிரேசில் நாட்டில் எக்ஸ் தளத்தில் சில போலி தகவல்கள் பரவியதால் ஒரு சில குறிப்பிட்ட கணக்குகளை முடக்க வேண்டுமென பிரேசில் நாட்டில் உள்ள உச்சநீதீமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவுக்கு எதிராக எலான் மஸ்க் கண்டனம் தெரிவித்திருந்தார். அதில், ஜனநாயக கொள்கையின் அடிப்படையில் இயங்கும் அதாவது ‘இது போல கணக்குகளை முடக்குவதனால் கருத்து சுதந்திரத்திற்கு தடையாக மாறிவிடும்’ என மஸ்க் தெரிவித்திருந்தார்.
இதனால், பிரேசிலிய உச்ச நீதிமன்றதிற்கும் மற்றும் மஸ்க்குக்கும் இடையே மோதல் தொடங்கியது. மேலும், பிரேசில் அரசு பலமுறை எச்சரித்த போதிலும், பிரேசிலின் சட்டத்தை மஸ்க் மதிக்கவில்லை. இதனால், அடுத்த கட்ட நடவடிக்கையாக பிரேசில் நாட்டில் ‘எக்ஸ்’ தளத்தை தற்காலிகமாக தடை செய்துள்ளனர்.
கூடுதலாக, மஸ்க்கின் செயற்கைக்கோள் இணைய நிறுவனமான Starlink -ன் நிதிச் சொத்துக்களையும் பிரேசில் நீதிமன்றம் முடக்கி உள்ளது. மேலும், 18.5 மில்லியன் டாலர் அபராதமும் விதித்துள்ளது. இந்த அபராதத்தை செலுத்தும் வரை பிரேசிலில் ‘எக்ஸ்’ தளத்தை தற்காலிக தடை செய்யப்பட்டிருக்கும் என பிரேசில் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பிரேசில் மக்களின் நிலைப்பாடு …!
பிரேசிலில், குறிப்பாக அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் மற்றும் செல்வாக்கு நிறைந்த பணக்காரர்கள் மத்தியில் எக்ஸ்-ன் ஒரு பிரபலமான தளமாக இருந்து வருகிறது. வரும் அக்டோபர் மாதம் பிரேசில் நாட்டில் தேர்தல்கள் நடைபெற உள்ளது.
இதனால், எக்ஸ்-ன் இந்த இடைக்கால தடை பிரேசில் நாட்டின் அரசியல் பிரச்சாரத்தை கணிசமாக பாதிக்கலாம். பிரேசிலில், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் பரவலாகப் பயன்படுத்தப்படவில்லை என்றாலும், அரசியல் விவாதம் மற்றும் தகவல் தொடர்புக்கு எக்ஸ் ஒரு முக்கியமான இடத்தை பிடித்து வருகிறது.
இந்த இடைக்கால தடையைத் தொடர்ந்து பிரேசிலில் ஒரு சில மக்கள் VPN-யை பயன்படுத்தி எக்ஸ் தளத்தை உபயோகப்படுத்தி வருகின்றனர். இதனால், பிரேசிலியன் பார் அசோசியேஷன், எக்ஸ்-ஐ அணுக VPN-யை பயன்படுத்தும் குடிமக்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும், இது போன்ற தடைகளை மீறி உரிய செயல்முறை இல்லாமல் பயன்படுத்தப்படக்கூடாது என்றும் தெரிவித்தது.
பிரேசிலில், எக்ஸ் தளத்தின் இந்த இடை நிறுத்தம், உலகெங்கும் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு மற்றும் பேச்சு சுதந்திரம் தொடர்பான பிரச்சனைகளை அதிகரிக்கும் என கருதப்படுகிறது.