போலந்து விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! துணை சென்ற போர் விமானங்கள்..!
போலந்து விமானத்திற்கு பயணத்தின் போது வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் விமானம் கிரீஸில் தரையிறக்கப்பட்டது.
போலந்தில் இருந்து கிரீஸ் செல்லும் ரயன் ஏர் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. மிரட்டல் வந்தது குறித்து விமானி கட்டுப்பாட்டு நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததையடுத்து FR6385 விமானம் கிரீஸின் ஏதென்ஸில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் பயணம் செய்த 190 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து விமானம் கிரேக்க வான்வெளியில் நுழைந்தபோது முன்னெச்சரிக்கையாக விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்க இரண்டு கிரேக்க எஃப்-16 போர் விமானங்கள் அனுப்பப்பட்டது என்று கிரேக்க பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விமானம் மற்றும் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்ததில் சந்தேகத்திற்குரிய வகையில் எதுவும் கிடைக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.