அரசு ஊழியர்கள் சென்ற பேருந்து மீது குண்டுவெடிப்பு! 7 பேர் உயிரிழப்பு!
ஆப்கானிஸ்தானில் எண்ணெய் நிறுவன ஊழியர்கள் சென்ற பேருந்து மீது வெடிகுண்டு தாக்குதல்..
ஆப்கானிஸ்தானின் பால்க் மாகாணத்தில் ஹைரதன் ஆயில் நிறுவன ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதாவது, ஆப்கானிஸ்தானின் பால்க் மாகாணத்தின் தலைநகரான மசார்-இ-ஷெரீப் நகரின் சாலையோரம் உள்ள ஒரு வண்டிக்குள் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது.
அப்போது, ஹைரதன் ஆயில் நிறுவன அரசு ஊழியர்களை ஏற்றி கொண்டு பேருந்து அப்பகுதியை கடந்தபோது குண்டு வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது. இதில், பேருந்து கடுமையாக சேதமடைந்தது. மேலும் அருகில் உள்ள வாகனம் மற்றும் அங்கிருந்த கடைகளும் தூக்கி வீசப்பட்டு சேதமடைந்தன. இந்த தாக்குதலில் ஏழு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 6 பேர் காயமடைந்தனர் என்று காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
குண்டுவெடிப்பின் பின்னணியில் இருந்தவர்கள் யார் என்பது இதுவரை தெரியவில்லை எனவும் தகவல் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும் ஐஎஸ் அமைப்பின் துணை அமைப்பான கொராசன் மகாண ஐஎஸ் அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. 2021ல் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பின்னர் தாக்குதல் தீவிரமடைந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.