பாகிஸ்தான் ராணுவம் மீது பலுசிஸ்தான் தற்கொலைப்படை தாக்குதல்.! 90 பேர் பலி?
பாகிஸ்தானின் நோஷ்கி என்ற நெடுஞ்சாலையில் குவெட்டாவிலிருந்து கஃப்டானுக்குச் சென்ற எட்டு இராணுவ வாகனங்கள் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.

பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army – BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின் எட்டு இராணுவ வாகனங்களை தாக்கியதாகவும், இதில் 90 பாகிஸ்தான் படையினர் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பலுசிஸ்தானின் மஜீத் பிரிகேடு (Majeed Brigade) என்ற தற்கொலைப் பிரிவு, ஆர்.சி.டி நெடுஞ்சாலையில் உள்ள ரக்ஷன் மில் அருகே வெடிகுண்டு நிரப்பப்பட்ட வாகனத்தை (VBIED) பயன்படுத்தி இந்த தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் ஒரு பேருந்து முழுமையாக அழிக்கப்பட்டு, பல வாகனங்கள் சேதமடைந்தன.
இந்த வாகனத் தொடர் குவெட்டாவிலிருந்து தாஃப்தான் நோக்கி சென்று கொண்டிருந்ததாகவும், தாக்குதலின் வெற்றி அவர்களின் உளவுத்துறையின் (ZIRAB) சிறப்பான செயல்பாடு மற்றும் தற்கொலைப் போராளிகளின் தியாகத்தை பிரதிபலிப்பதாகவும் பலுசிஸ்தான் தெரிவித்துள்ளது.
இருப்பினும், பாகிஸ்தான் அதிகாரிகள் தரப்பில் இருந்து இந்த எண்ணிக்கை உறுதிப்படுத்தப்படவில்லை. ஆரம்ப அறிக்கைகளின்படி, தாக்குதலில் 12 பாகிஸ்தான் படையினர் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்து மருத்துவமனைகளில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலால் பலோசிஸ்தான் பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஹெலிகாப்டர்கள் மற்றும் மீட்பு குழுக்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.
#BREAKING: Baloch Liberation Army claims responsibility for the Noshki attack in Balochistan on Pakistani military bus. Baloch rebels claim 90 military personnel killed so far. (If BLA is saying 90 killed, then surely at least 30-45 have been killed) https://t.co/TLVrhrB58m pic.twitter.com/WlOPWCfOSl
— Aditya Raj Kaul (@AdityaRajKaul) March 16, 2025
பலுசிஸ்தான் கிளர்ச்சியாளர்கள், பாகிஸ்தான் அரசு பலோசிஸ்தானின் இயற்கை வளங்களை சுரண்டுவதாகவும், உள்ளூர் மக்களுக்கு நியாயமான பங்கு அளிக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டி, பல ஆண்டுகளாக பிரிவினைவாத போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம், அப்பகுதியில் தொடர்ந்து நிலவும் மோதல்களை மேலும் தீவிரமாக்கியுள்ளது.
முன்னதாக, கடந்த மார்ச் 11 அன்று ஜாஃபர் எக்ஸ்பிரஸைக் கடத்தியது பலுசிஸ்தான் விடுதலைப் படை. இந்த ரயிலில் 400க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பலோன் மலைகளில் உள்ள ஒரு சுரங்கப்பாதை வழியாக ரயில் சென்று கொண்டிருந்தபோது, பதுங்கியிருந்து பலுசிஸ்தான் கிளர்ச்சியாளர்கள் அதைத் தாக்கினர். இதில் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்ட 214 வீரர்களையும் கொன்றுவிட்டதாக பலுசிஸ்தான் இராணுவம் கூறியது குறிப்பிடத்தக்கது.