ஹமாஸ் மீதான தாக்குதல் அதிகரிப்பு! வடக்கு காசா நகரில் இருந்து மக்கள் வெளியேற இஸ்ரேல் கெடு!

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே யுத்தம் 8வது நாளாக நீடித்து வரும் நிலையில், 6 மணி நேரத்திற்குள் வடக்கு காசா நகரில் இருந்து மக்கள் வெளியேற்றுவதற்கு இஸ்ரேல் ராணுவம் கெடு வைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள வழித்தடங்களில் 6 மணி நேரம் தாக்குதல் நடத்த போவதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு காசாவில் உள்ள மக்கள் 6 மணி நேரத்திற்குள் கான் யூனிஸ் நகரத்திற்கு செல்ல வேண்டும்.
இஸ்ரேல் விதித்துள்ள காலக்கேடுக்குள் காசா நகரில் உள்ள மக்கள் வெளியேறுவது சாத்தியமில்லை என ஐ.நா பதில் அளித்துள்ளது. அதாவது, 24 மணி நேரத்தில் காசா நகரில் இருந்து 10 லட்சம் மக்கள் வெளியேற சாத்தியமில்லை என கூறியுள்ளார். ஹமாஸ் குழுவினருக்கு எதிராக போர் நீடித்து வரும் நிலையில், இஸ்ரேல் தனது ராணுவம் பலத்தை அதிகரித்துள்ளது. ஹமாஸ் அமைப்புகள் மீதான தாக்குதலில் சுமார் 3.60 லட்சம் வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இஸ்ரேலில் உள்ள 1.20 லட்சம் யூத மக்களும் போரில் ஈடுபட பதிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஒரே இரவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் குழுவின் முக்கிய புள்ளி பலி!
கடந்த சனிக்கிழமை முதல் இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் தொடங்கி நடைபெற்று வருகிறது. பாலஸ்தீன பகுதியான காசாவில் இருந்து ஆயிரக்கணக்கான குண்டுகளை இஸ்ரேல் மீது வீசி ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதன்பின், ஹமாஸ் அமைப்பினர் மீது பதில் தாக்குதல் நடத்தியது இஸ்ரேல். ஹமாஸ் அமைப்பினரை ஒடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
அதுவும் குறிப்பாக காசா மீது தொடர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. இந்த தொடர் தாக்குதலில் இதுவரை 1,200 பாலஸ்தீனியர்களும், 1,300 இஸ்ரேலியர்களும் உயிரிழந்துள்ளனர். இந்த சமயத்தில் இஸ்ரேலின் பாதுகாப்புப் படைகள், நேற்று காசா நகரின் ஹமாஸ் பதுங்கு குழியில், வைக்கப்பட்டிருந்த 250க்கும் மேற்பட்ட பணயக்கைதிகளை மீட்கப்பட்டனர். மேலும், காசா பகுதியில் நேற்று ஒரே இரவில் இஸ்ரேல் பாதுகாப்புப் படை நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் பயங்கரவாதக் குழுவின் மூத்த உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.
இதனிடையே, 24 மணி நேரத்தில் காசாவில் இருந்து மக்கள் வெளியேற வேண்டும் என இஸ்ரேல் கூறியது. காசாவில் உச்சகட்ட மனித உரிமை மீறல்கள் நடந்து வருவதாகவும் ஐ.நா குற்றம்சாட்டியுள்ளது. இந்த சூழலில், ஹமாஸ் மீதான தாக்குதலை இஸ்ரேல் அதிகரித்துள்ள நிலையில், 6 மணி நேரத்திற்குள் வடக்கு காசா நகரில் இருந்து மக்கள் வெளியேற்றுவதற்கு இஸ்ரேல் ராணுவம் கெடு வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.