மருத்துவமனை மீது தாக்குதல் – 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு : பாலஸ்தீன அதிபர்
காசாவில் உள்ள அல் அரபு மருத்துவமனை மீது நடத்திய இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் 500 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அல்-அஹ்லி மருத்துவமனையின் புகைப்படங்கள், உடைந்த கண்ணாடி மற்றும் உடல் பாகங்கள் உள்ளிட்ட புகைப்படங்களை வெளியிட்டு 500 பேர் கொல்லப்பட்டதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இங்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இடைவிடாத தாக்குதல்களில் இருந்து மருத்துவ சிகிச்சையை பெற்று வருகின்றனர். தாக்குதலில் நடத்தப்பட்ட மருத்துவமனை குழந்தைகள் நிறைந்த மருத்துவமனை என்பது குறிப்பிடத்தக்கது. சிகிச்சை பெற்றவர்கள் மட்டுமன்றி, தாக்குதலுக்கு பயந்து மருத்துவமனையில் தஞ்சமடைந்தவர்களும் இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.
மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு கனடா, கத்தார், எகிப்து போன்ற நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளது. அதேபோல் இஸ்ரேலில் உள்ள கிறிஸ்தவ மதபோதகர்களும் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஹமாஸ் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், மருத்துவமனை மீதான தாக்குதல் போர்குற்றம், இனப்படுகொலை, இனப்படுகொலையை சர்வதேச நாடுகள், அரபு நாடுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது என குற்றம்சாட்டியுள்ளது.
இந்த தாக்குதலுக்கு பாலத்தீன அதிபர் முகமது அப்பாஸ் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் பைடன் தனது எக்ஸ் தள பக்கத்தில், காஸாவிலுள்ள அல் அஹ்லி அரபு மருத்துவமனையில் ஏற்பட்ட வெடிவிபத்து மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட பயங்கரமான உயிர்ச் சேதத்தால் நான் கோபமும் ஆழ்ந்த வருத்தமும் அடைந்துள்ளேன்.
இந்தச் செய்தியைக் கேட்டவுடன், ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஆகியோரிடம் பேசி, என்ன நடந்தது என்பது பற்றிய தகவல்களைத் தொடர்ந்து சேகரிக்குமாறு எனது தேசியப் பாதுகாப்புக் குழுவுக்கு உத்தரவிட்டேன்.’ என தெரிவித்துள்ளார். இதற்கிடையில் அமெரிக்க அதிபர் பைடன் இன்று இஸ்ரேல் செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது.