ரஷ்யாவுக்குள் புகுந்து தாக்குதல்! வாக்னர் படையால் பதற்றம் அதிகரிப்பு!

Wagner group

உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா சார்பில், களமிறக்கப்பட்ட வாக்னர் கூலிப் படைகள், ரஷ்யாவுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்.

ரஷ்ய தனியார் ராணுவ நிறுவனமான Wagner கூலிப்படை வீரர்கள் ரஷ்யாவுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி வருவதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. உள்நாட்டு மோதலை தூண்டும் வகையில் வாக்னர் படை செயல்பட்டதாக ரஷ்யா பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளது. ரஷ்யாவின் குற்றசாட்டை அடுத்து, வாக்னர் படை வீரர்கள் திடீரென தாக்குதல் நடத்தி வருவதால் பதற்றம் நிலவி வருகிறது.

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக வாக்னர் கூலிப்படை சண்டையிட்டு வந்தது. அப்போது, ரஷ்ய இராணுவம், வாக்னர் கூலிப்படைகளைத் தாக்கியதாக குற்றசாட்டு எழுந்தது. இதனால், ரஷ்யாவுக்குள்ளே அரசு ராணுவம், தனியார் ராணுவம் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த சமயத்தில், உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா சார்பில், களமிறக்கப்பட்ட வாக்னர் கூலிப் படைகள், ரஷ்யாவுக்குள் புகுந்து தாக்குதல் நடத்த உள்ளதாக எச்சரிக்கை விடுத்தது. அதன்படி தற்போது தாக்குதல் நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால், ரஷ்ய தலைநகரில் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாஸ்கோ மேயர் தகவல் தெரிவித்துள்ளார். ரஷ்ய ராணுவம் தனது படைகளைத் தாக்கியதாக குற்றம் சாட்டிய ரஷ்ய தனியார் ராணுவ நிறுவனமான Wagner-இன் தலைவர் பிரிகோஜின், தனது படைகள் உக்ரைனில் இருந்து ரஷ்யாவிற்குள் நுழைந்துவிட்டதாக கூறினார்.

தங்களுக்குத் தடையாக இருப்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள். ரஷ்யாவின் ராணுவத் தலைமையை அழிப்போம். எங்கள் ஆட்டத்தைத் தொடங்கிவிட்டோம். இனி எங்கள் வழியில் எதிர்கொள்ளும் எல்லாவற்றையும் துவம்சம் செய்வோம். ராணுவத் தலைமை மீதான தனது விமர்சனம் ஒரு சதி அல்ல, நீதிக்கான மாற்று வழி என்றார்.

மேலும், உக்ரைன் போரை எதிர்க்கொள்ள ரஷ்யா சார்பில், களமிறக்கப்பட்ட வாக்னர் கூலிப் படைகள் மீது ரஷ்ய ராணுவம் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாகவும், இதனால் ரஷ்யாவின் தலைமையத்துவத்தை கவிழ்க்க, படையெடுப்போம் என வாக்னர் கூலிப்படை தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் எச்சரிக்கை விடுத்திருந்தார். ரஷ்யா சார்பாக உக்ரைனில் சண்டையிட்ட படைகளுக்குள் ஏற்பட்டுள்ள இந்த மோதலை அடுத்து, ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் பதற்றம் அதிகரித்து வருகிறது.

மாஸ்கோவின் முக்கிய இடத்தில் ராணுவத்தினர் பாதுகாப்பை பலப்படுத்தி வருகின்றனர். மேலும், ரஷ்யாவின் முக்கிய பகுதிகள் அனைத்திற்கும் ராணுவ ஆயுத வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், ரஷ்யாவிற்கு எதிராக படையெடுப்போம் எனக் கூறிய வாக்னர் படை குழு தலைவர் பிரிகோஜின் மீது ரஷ்யா வழக்குப்பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்