3வது நாளாக தொடரும் தாக்குதல்: யாருடைய உதவியும் தேவையில்லை – இஸ்ரேல் அறிவிப்பு!
பிற நாடுகளின் ராணுவம் உதவிகள் எங்களுக்கு தேவையில்லை, இந்த போரை நாங்களே பார்த்துக்கொள்வோம் என இஸ்ரேல் தூதர் அறிவித்துள்ளார்.
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே தொடர்ந்து மூன்றாம் நாளாக போர் நடைபெற்று வரும் நிலையில், அங்கு பகல்-இரவு என்று பார்க்காமல் இரு தரப்பினரும் வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறார்கள். இஸ்ரேலின் பல்வேறு பகுதிகளில் நுழைந்துள்ள ஹமாஸ் இயக்கத்தினர், காசா நகரை குறி வைத்து தாக்குதலை நடத்தி வருகிறார்கள்.
இந்த கொடூர தாக்குதலில் இரு தரப்பிலும் 1,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். காசா பகுதி தங்களுடையது எனக் கூறி இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக பிரச்சனைகள் நடந்து வந்த நிலையில், மீண்டும் இரு நாடுகளுக்கும் இடையே போர் தொடங்கியுள்ளது.
இப்படி போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஹமாஸ் அமைப்புக்கு ஈரான், கத்தார், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அதேசமயம், லெபனான் மக்களும் பெருமளவில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில், நேற்று லெபனான் மீது குண்டு மழை பொழிந்தது இஸ்ரேல் ராணுவம்.
மற்றோரு பக்கம், இஸ்ரேலுக்கு அமெரிக்கா, பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் ஆதரவை தெரிவித்துள்ளன. இந்தியாவும் தனது ஆதரவை தெரிவித்து ஹமாஸ் அமைப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது, ஹமாஸ் குழுவினரை எதிர்கொள்ள எங்களுக்கு யாருடைய உதவியும் தேவையில்லை என இஸ்ரேல் அறிவித்துள்ளது. அமெரிக்கா எங்களுக்கு ஆயுதங்கள் கொடுத்து உதவுவது உண்மைதான். எங்கள் போரை நாங்களே பார்த்து கொள்வோம், பிற நாடுகளின் உதவி தேவையில்லை என்று தாக்குதல் தொடர்பாக இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நோர் கிலோன் தகவல் தெரிவித்துள்ளார்.