விண்வெளியில் மற்றொரு வரலாறு! ராக்கெட்டில் கிளம்பும் இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா!
நாசாவுடன் இணைந்து, இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா அடுத்த மாதம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்லவுள்ளார்.

அமெரிக்கா : இந்திய விண்வெளி ஆய்வில் புதிய அத்தியாயத்தை எழுத உள்ளது. ஏனென்றால், சுபான்ஷு சுக்லாவின் சர்வதேச விண்வெளி நிலைய (ISS) பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். வரும் மே மாதம் தொடங்க உள்ள இந்தப் பயணத்தில், இந்திய விமானப்படையின் குரூப் கேப்டனான சுபான்சு சுக்லா, ஆக்ஸியம் மிஷன் 4 (Ax-4) மூலம் விண்வெளிக்குச் செல்கிறார்.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான ISRO மற்றும் சர்வதேச ஒத்துழைப்புடன் நிகழவுள்ள இந்த மிஷன், இந்தியாவின் விண்வெளித் திறன்களை உலக அரங்கில் வெளிப்படுத்தும் ஒரு முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. சுமார் 14 நாட்கள் விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கும் சுக்லா, பல்வேறு அறிவியல் ஆய்வுகளில் பங்கேற்பார்.இந்தப் பயணம், இந்தியாவின் ககன்யான் திட்டத்திற்கு ஒரு முன்னோட்டமாகவும், எதிர்காலத்தில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்கான தயாரிப்பாகவும் அமையும்.
ககன்யான் திட்டம், 2026ஆம் ஆண்டு இந்திய விண்வெளி வீரர்களை பூமியின் குறைந்த சுற்றுப்பாதையில் (Low Earth Orbit) அனுப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. எனவே, அதற்கு முன்னதாக சுக்லாவின் இந்த பயணம் பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. இந்த மிஷன், அமெரிக்காவின் ஆக்ஸியம் ஸ்பேஸ் நிறுவனத்துடனான ஒத்துழைப்பின் மூலம் நடைபெறவிருக்கிறது.
ஏற்கனவே 1984 ஆம் ஆண்டு சோவியத் விண்கலத்தில் இந்திய விமானப்படை வீரரான ராகேஷ் ஷர்மா விண்வெளிக்கு சென்றிருந்தார். சால்யூட் 7 விண்வெளி நிலையத்தில் 7 நாட்கள் தங்கியிருந்தார். அவரை தொடர்ந்து நான்கு தசாப்தங்களுக்குப் பிறகு விண்வெளிக்குச் செல்லும் முதல் இந்திய விண்வெளி வீரர் என்ற பெருமையைப் சுபான்ஷு சுக்லா அடுத்த மாதம் பெறவிருக்கிறார்.
இந்த நிகழ்வை இந்தியாவின் விண்வெளித்துறையில் ஒரு பெருமைமிக்க மைல்கல் என மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஜித்தேந்திர சிங் பாராட்டியுள்ளார். மேலும், சுபான்சு சுக்லா மே மாதம் எந்த தேதியில் விண்வெளிக்கு செல்லவிருக்கிறார் என்பதற்கான தகவல் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.