உளவு பார்க்கும் ஆப்பிள் சிரி? ரூ.790 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு.!
இந்த உரையாடல்கள் ஆப்பிள் நிறுவனத்தால் பதிவு செய்யப்பட்டு சேமிக்கப்பட்டது மட்டுமல்லாமல், மூன்றாம் தரப்பினருடன் பகிரப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்கா: ஹே சிரி… இதை செய், ஹே சிரி… அதை செய்… என சொல்லலும் ஆப்பிள் சொந்தகாரர்கள் அந்த சாதனத்தில் இருக்கும் டிஜிட்டல் அசிஸ்டன்ட் என்று சொல்லப்படும் ‘ஹே சிரி’-க்கு அடிமையானவர்களுக்கு இது ஒரு கேட்ட செய்தி என்றே சொல்ல வேண்டும்.
அதாவது, ஆண்ட்ராய்டு போன்களில் இருக்கும் ‘ஹே கூகுளை’ போல், ஆப்பிள் போன்களில் ‘ஹே சிரி’ (Siri) என்ற தனிப்பட்ட
அம்சம் உள்ளது. இது நாம் என்ன கேட்கிறோமோ அதற்கு விளக்கம் கொடுக்கும். இந்த நிலையில், பயனர்கள் தற்செயலாக சிரியை பயன்படுத்திய பிறகு, தனிப்பட்ட உரையாடல்களைப் பதிவுசெய்து, இந்த உரையாடல்களை மூன்றாம் தரப்பினருக்கு கொடுக்கப்பட்டதாக ஆப்பிள் மீது பழி சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, கலிபோர்னியாவின் ஓக்லாண்டில் அமைந்துள்ள ஃபெடரல் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கில், ஐபோன், ஐபாட் மற்றும் ஹோம் பாட் போன்ற ஆப்பிள் சாதனங்களில் இருக்கும் சிரி அனுமதியின்றி பயனர்களின் தனிப்பட்ட உரையாடல்களைக் கேட்பதாகக் குற்றம்சாட்டப்பட்டது.
மேலும், சிரி இதனை பதிவு செய்து சேமித்து வைத்தது மட்டுமின்றி, இந்த தகவல் மூன்றாம் நபர்களுக்கும் பகிரப்பட்டது என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், சிரி தனிப்பட்ட உரையாடல்களைக் கேட்டதாக ஆப்பிள் மீது குற்றம் சாட்டப்பட்டதால், 95 மில்லியன் டாலர் (790 கோடி ரூபாய்) இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என ஆப்பிள் நிறுவனத்திற்கு ஃபெடரல் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
அந்த உத்தரவின்படி, பயனர்களுக்கு தெரியாமல் பதிவு செய்யப்பட்ட உரையாடல்களை நீக்கிவிட்டதை ஆப்பிள் உறுதிசெய்ய வேண்டும். சிரி மூலம் குரல் தரவு எவ்வாறு பயன்படுத்தப்படும் என்பதை நிறுவனம் தெளிவுபடுத்த வேண்டும் மற்றும் பயனர்களுக்கு அதன் மீது கட்டுப்பாட்டை வழங்க வேண்டும்.
இது தவிர, டிஜிட்டல் அசிஸ்டென்ட் சிரியின் உதவியுடன் கேட்கப்பட்ட குரலில் என்ன செய்யப்படும் என்பதையும் ஆப்பிள் தெளிவுபடுத்த வேண்டும், மேலும் பயனர்கள் அதன் மீது முழு உரிமையையும் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.