இலங்கையின் 9-வது அதிபராக பதவியேற்றார் அநுர குமார திசநாயக.!
இலங்கையில் புதிய அதிபராக அநுர குமார திசநாயக, ஜனாதிபதி செயலகத்தில் பிரதம நீதியரசர் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
கொழும்பு : இலங்கையின் 9-ஆவது அதிபர் தேர்தல் கடந்த (21-ம் தேதி) சனிக்கிழமை நடைபெற்றது. பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை, சற்று இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ள நிலையில், இந்தத் தேர்தல் முக்கியத்துவம் பெற்றது.
தேர்தலில் மொத்தம் 38 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இருந்தாலும், சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்ட அந்நாட்டின் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க, முக்கிய எதிர்க்கட்சித் தலைவரான ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தி முன்னணி சார்பில் ஜனதா விமுக்தி பெரமுன (ஜேவிபி) கட்சித் தலைவர் அநுரகுமார திசாநாயக ஆகிய மூவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
இறுதியில், தேசிய மக்கள் சக்தி தலைவர் அநுர குமார திசநாயகே வெற்றி பெற்றார். எதிர்க்கட்சித் தலைவர் சஜீத் பிரேமதாச இரண்டாவது இடத்தைப் பெற்ற நிலையில், தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க 3-ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டார்.
மேலும், முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் யாருக்கும் பெரும் பான்மை (50 சதவீதத்துக்கும் அதிகம் கிடைக்காத நிலையில், இலங்கை தேர்தல் வரலாற்றிலேயே முதல்முறையாக 2-ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கை மேற்கொள் ளப்பட்டு வெற்றியாளராக அநுர குமார திசாநாயக தேர்வு செய்யப்பட்டார்.
தொடர்ந்து, கடும் இழுபறிக்கு பின்னர், அநுர குமார திசநாயகே வெற்றி பெற்றதாக இலங்கை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதையடுத்து, 9 வது அதிபராக அவர் பதவியேற்றார். அவர், ஜனாதிபதி செயலகத்தில் பிரதம நீதியரசர் முன்னிலையில், பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
இதனிடையே, பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் தினேஷ் குணவர்தன. இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை அடுத்து இடைக்கால பிரதமராக தினேஷ் குணவர்தன பதவியேற்றார்.
இந்த (2024) தேர்தலில் அநுரகுமார திசாநாயக 57,40,179 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். கடந்த 2019 அதிபர் தேர்தலிலும் திசநாயக போட்டியிட்டார். அப்போது அவர் 4.18 லட் சம் வாக்குகள் அதாவது மொத்தம் பதிவானதில் 3.16 சதவீதம் வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் புதிய மறுமலர்ச்சி
இந்நிலையில், தனது வெற்றியையடுத்து அநுர குமார வெளியிட்டுள்ள அறிக்கையில், வலிமை மற்றும் புதிய கண்ணோட்டத்துடன் நாம் தேடும் புதிய மறுமலர்ச்சி தொடங்கும் என தெரிவித்துள்ளார். மேலும், சிங்களர்கள், தமிழர்கள், முஸ்லீம்கள் என அனைவரின் ஒற்றுமையே புதிய தொடக்கத்தின் அடித்தளம் என்றும் கூறியுள்ளார்.
The dream we have nurtured for centuries is finally coming true. This achievement is not the result of any single person’s work, but the collective effort of hundreds of thousands of you. Your commitment has brought us this far, and for that, I am deeply grateful. This victory… pic.twitter.com/N7fBN1YbQA
— Anura Kumara Dissanayake (@anuradisanayake) September 22, 2024
யார் இந்த இலங்கையின் புதிய அதிபர்?
55 வயதாகும் திசநாயக, இலங்கை தலைநகர் கொழும்பில் அமைந்துள்ள அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள தம்புத்தேகம கிராமத்தில் பிறந்தவர். களனி பல்கலைக்கழகத்தில் அறிவியல் பட்டப்படிப்பை முடித்த இவர், கல்லூரி நாட்களிலேயே மாணவர் அரசியலில் ஈடுபட்டார்.
1987 முதல் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 1995ம் ஆண்டு திசநாயக சோசலிச மாணவர் சங்கத்தின் தேசிய அமைப்பாளராக ஆனார். 2000ம் ஆண்டு திசநாயக முதல்முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வானார். பின்னர் கட்சியின் தலைவர் அந்தஸ்தையும் பெற்றார்.
பொருளாதார நெருக்கடி காலத்தில், அரசுக்கு எதிராக தீவிர போராட்டங்களை முன்னெடுத்தார். உழைக்கும் மக்களுக்கான அரசியலை பேசியதால் மக்கள் ஆதரவு அவருக்கு கிடைத்தது. திசநாயக, 2004ம் ஆண்டு தமிழ் இனப்படுகொலைக்கு காரணமான ராணுவ நடவடிக்கையை ஆதரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.