இந்திய மீனவர்கள் இலங்கை கடலில் மீன்பிடிப்பது தடுக்கப்படும்.! இலங்கை அதிபர் பேச்சு.!
இந்திய மீனவர்கள் இலங்கை கடற்கரை பகுதியில் மீன்பிடிப்பது தடுக்கப்படும் என இலங்கை அதிபர் அநுரகுமார திசாநாயக்க, யாழ்ப்பாணத்தில் பேசியுள்ளார்.
யாழ்ப்பாணம் : இலங்கையில் வரும் நவம்பர் 14ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அந்நாட்டில் அதிபருக்கு தான் அதிக செல்வாக்கு என்றாலும், நாட்டில் சட்ட திருத்தங்களை கொண்டு வர நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இடங்களை கைப்பற்ற வேண்டியது அவசியம்.
இலங்கையில் உள்ள 225 இடங்களில் மக்கள் தேர்வு செய்யும் 196 இடங்களில் அதிக இடங்களை புதிய அரசாங்கம் பெற வேண்டும். ஏற்கனவே 4 எம்பிகளை மட்டுமே கொண்டிருந்த தேசிய மக்கள் கட்சி இந்த முறை அதிக தொகுதிகளை வெல்ல அக்கட்சி தலைவரும் தற்போதைய இலங்கை புதிய அதிபருமான அநுரகுமார திசாநாயக்க தீவிரமான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ரணில்விக்ரமசிங்கே, மகிந்த ராஜபக்சே கட்சியினர்களுக்கு இடையேயும் கடும் போட்டி நிலவுகிறது.
தேர்தல் பிரச்சாரம் தொடர்பாக தமிழர்கள் மற்றும் மீனவர்கள் அதிகம் வாழும் யாழ்ப்பாணம் பகுதிக்கு சென்ற இலங்கை அதிபர் அங்கு பேசுகையில், ” இலங்கை தமிழர்கள் வசிக்கும் வடக்கு பகுதியில் உள்ள கடல் வளங்களை இந்திய மீனவர்கள் அழித்து வருகின்றனர். இதுபோன்ற கடல் வளங்களை சுரண்டுவது நடக்காமல் இருப்பதற்கும், இங்குள்ள மீனவர்களின் உரிமைகளை பாதுகாக்கவும் தனது அரசாங்கம் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். ” என்று வாக்குறுதி அளித்தார்.
மேலும், “இலங்கை அரசாங்கத்தினால் (ராணுவத்தால்) ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழர்கள் நிலங்கள் படிப்படியாக அந்தந்த நில உரிமையாளர்களுக்கே திருப்பி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், சிறையில் உள்ள அரசியல் கைதிகள் (தமிழர்கள்) விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள்.” என்றும் தமிழர்கள் மற்றும் அங்குள்ள மீனவர்களை ஈர்க்கும் வகையில் பல்வேறு வாக்குறுதிகளை இலங்கை அதிபர் அநுரகுமார திசாநாயக்க பேசியுள்ளார்.