அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து.. கட்டடங்கள் மீது மோதி வெடித்து சிதறியதில் 6 பேர் பலி.!
அமெரிக்காவின் பிலடெல்பியாவில் சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கியதில் 6 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
பிலடெல்பியா : அமெரிக்காவில் மீண்டும் விமான விபத்து நிகழ்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் ஃபிலாடெல்பியா நகரில் இருந்து சிறிய ரக விமானம் ஒன்று மிசோரிக்கு புறப்பட்டது. அப்போது, புறப்பட சில நொடிகளில் திடீரென அவ்விமானம் விமான நிலையத்திற்கு அருகே இருந்த குடியிருப்புக் கட்டடங்கள் மீது, மோதி வெடித்து சிதறியது.
வடகிழக்கு பிலடெல்பியாவில் உள்ள ரூஸ்வெல்ட் மால் அருகே விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளியான வீடியோவில், பிலடெல்பியா நகரில் விமானம் வெடித்து சிதறியபோது, வீடுகள் மற்றும் கார்கள் தீ எரிந்து கொண்டிருப்பதை காட்டுகிறது.
இந்த விபத்தில் விமானத்திலிருந்து 6 பேர் பலியாகினர். இதில் இரண்டு மருத்துவர்கள், இரண்டு விமானிகள், ஒரு நோயாளி மற்றும் நோயாளியின் குடும்ப உறுப்பினர் ஆகியோர் அடங்குவர். பின்னர் விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும், பிலடெல்பியா தீயணைப்பு துறையினர் மற்றும் உள்ளூர் போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
Multiple casualties in Philadelphia 🇺🇸 plane crash 💔 pic.twitter.com/uowkYxY0C6
— Peché Africa 🇿🇦 (@pmcafrica) February 1, 2025
இதேபோல் இரண்டு நாட்களுக்கு முன்பு, அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் உள்ளூர் நேரப்படி புதன்கிழமை (ஜன.29) இரவு 9 மணியளவில், கன்சாஸ் மாநிலத்தில் உள்ள விசிட்டாவிலிருந்து வந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் ராணுவ ஹெலிகாப்டர் மீது வானில் மோதியது. இதில் உயிரிழந்த 67 பேரில் 41 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
பயணிகள் விமானம் ரீகன் வாஷிங்டன் தேசிய விமான நிலையத்தில் தரையிறங்குவதற்காக சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது. விபத்து ஏற்பட்ட விமானத்தில் 60 பயணிகள் மற்றும் நான்கு பணியாளர்கள் இருந்தனர், ஹெலிகாப்டரில் மூன்று அமெரிக்கப் பணியாளர்கள் இருந்தனர் என்று கூறப்படுகிறது.