பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை.! நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.!
பாகிஸ்தான் : அரசு பதவியில் வகிப்பவர்களுக்கு கொடுக்கப்படும் பரிசு பொருட்கள் அனைத்தும் அரசு கருவூலத்தில் பாதுகாத்து வைக்கப்படும். அது அரசுடைமைக்கப்பட்ட பரிசுப்பொருட்களாக மட்டுமே பார்க்கப்படும். அதனை தவறாக பயன்படுத்தியதாக பாகிஸ்தான் முன்னாள் அதிபர் இம்ரான் கான் மீது பல்வேறு வழக்குகள் பதியப்பட்டன.
இம்ரான் கான் பிரதமர் பதவியில் இருந்த போது தனக்கு வந்த பரிசு பொருட்களை அரசு கருவூலத்தில் வைக்காமல், தனது வீட்டிற்கு கொண்டு சென்றார் என அவர் மீது இஸ்லாமாபாத் கீழமை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
அவர் எம்பி பதவியில் தொடர்வதால் இது கீழமை நீதிமன்ற விசாரணைக்கு ஏற்றது அல்ல என இம்ரான்கான் தரப்பு உச்சநீதிமன்றம் வரை சென்று முறையிட்டது. இருந்தும், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது என கூறி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து, இஸ்லாமாபாத் நீதிமன்றம் விசாரணையை தொடங்கியது.
இன்று விசாரணை முடிந்து வழக்கின் தீர்ப்பு வாசிக்கப்பட்டது. அதில், முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது எனவும், அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது எனவும், இன்றைய தினமே அவர் இஸ்லாமாபாத் காவல்துறையினரால் கைது செய்யப்பட வேண்டும் எனவும் கூறி தீர்ப்பு வழங்கியுள்ளது.
3 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றதால் பாகிஸ்தான் எம்பி பதவியில் இருந்து இம்ரான் கான் நீக்கப்படுவார் என தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக அவர் விசாரணைக்காக கைது செய்யப்பட்டபோதே , பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் வன்முறை , போராட்டங்கள் நடைபெற்றன. இந்நிலையில், 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டால் பாகிஸ்தானில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.