இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்.! ஹமாஸின் தளபதி உயிரிழப்பு.!
தென்மேற்கு பாலஸ்தீன பகுதியான காசாவில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகள் மூலம், மத்திய கிழக்கில் உள்ள நாடான இஸ்ரேல் மீது கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் ராணுவம் இன்றுவரை ஹமாஸ் அமைப்பினரின் உறைவிடமாக இருக்கக்கூடிய காசா நகர் மீது தொடர்ந்துத் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த இரண்டு தரப்பினருக்கும் இடையே போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்கா நேரடி ராணுவ உதவிகளை செய்து வருகிறது. அதே போல, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உட்பட பல்வேறு நாட்டு தலைவர்கள் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
தொடர்ந்து காசா மீதான வான்வெளி மற்றும் தரைவழி தாக்குதல்களை இஸ்ரேல் தீவிரப்படுத்தி வருகிறது. அதன்படி, தற்போது இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலில் ஹமாஸின் வடக்கு பகுதியின் தளபதி ஹசன்-அல்-அப்துல்லா உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் தற்காப்புப் படை (IDF) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐடிஎஃப் வெளியிட்டுள்ள பதிவில், “ஐடிஎஃப் போர் விமானங்கள் ஐடிஎஃப் மற்றும் ஐஎஸ்ஏ உளவுத்துறையின் அடிப்படையில் துல்லியமான வான்வழித் தாக்குதலை நடத்தி ஹமாஸின் வடக்கு கான் யூனிஸ் ராக்கெட் வரிசையின் தளபதி ஹசன் அல்-அப்துல்லாவை கொன்றது.” என்று தெரிவித்துள்ளது.
IDF fighter jets carried out a precise air strike based on IDF and ISA intelligence and eliminated the Commander of Hamas’ Northern Khan Yunis Rockets Array, Hassan Al-Abdullah. pic.twitter.com/HrDD4DXAU2
— Israel Defense Forces (@IDF) October 26, 2023
மேலும், 20வது நாளாக நடக்கும் இந்த போரில் தற்போது வரை 7,028 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 15,000-க்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இதில் 2,913 குழந்தைகள், 1,709 பெண்கள் மற்றும் 397 முதியவர்கள் அடங்குவர்.
இதற்கிடையில், கடந்த அக்டோபர் 7ம் தேதி முதல் ஹமாஸ் அமைப்பினர் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதலுக்கு இதுவரை ரூ.37.350 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாகவும், இஸ்ரேலுக்கு ஒரு நாளைக்கு சுமார் $246 மில்லியன் டாலர் போருக்கான நேரடிச் செலவு என்றும் இஸ்ரேலின் நிதியமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.