இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வெளி தாக்குதல்! காசாவில் 16 பேர் பலி?
மருத்துவமனையில் புலம் பெயர்ந்த பொதுமக்களில் 16 பேர் இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.
காசா : கடந்த ஆண்டில் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து பலரும் பாதிக்கப்பட்ட்டனர், பல இடங்கள் இஸ்ரேலில் நாசமானது. மேலும், ஆயிரத்திற்கும் மேலானோர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் பணயக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.
அவர்களில் ஒரு சிலர் போர் நிறுத்த அடிப்படையில் மீட்கப்பட்டாலும், மீதம் இருக்கும் மக்களை மீட்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் தெரிவித்திருந்தது. ஒரு ஆண்டை கடந்து நடந்து வரும் இந்த போரில் மட்டும் சுமார் 42,000 பேருக்கும் மேல் காசா பகுதியில் உயிரிழந்துள்ளனர். மேலும், 90,000-திற்கும் மேற்பட்டோர் தீவிரமான காயம் கண்டனர்.
இதனை அதிகாரப்பூர்வமாக காசாவின் சுகாதார அமைப்பு தெரிவித்தது. தற்போதைய சூழலில் இஸ்ரேல் – ஈரான் இடையேயான போர் பதற்றம் அதிகரித்து கொண்டிருக்கும் இதே வேலையில், தற்போது, இஸ்ரேல் ராணுவம் மீண்டும் காஸாவில் தாக்குதல் நடத்தி இருக்கிறது.
காசாவின் வடக்கே அமைந்துள்ள ஜபாலியா நகரில் பெய்த் லாஹியா பகுதியில் உள்ள கமல் அத்வான் மருத்துவமனையில் பாதுகாப்பு கோரி அடைக்கலம் புகுந்து சில குடும்பத்தினர் இருந்தனர். இப்படி இருக்கையில், இஸ்ரேல் ராணுவத்தினர் இந்த பகுதியில் தற்போது வான்வழி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த தாக்குதலில், மருத்துவமனையில் தஞ்சமடைந்து இருந்த பொதுமக்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 16 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், அந்த தாக்குதலில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர்.
இதனால், அவர்கள் அங்கிருந்து மீட்கப்பட்டு சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. இதே போல மேற்கு கரையிலும் வாகனத்தில் சென்ற பாலஸ்தீனிய இளைஞர்கள் மீது இஸ்ரேலின் ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளதாகவும் அதில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.