5 வருடங்களுக்கு பிறகு விண்ணில் இருந்து பூமியில் மோதிய ஏயோலஸ் செயற்கைக்கோள்..!

Aeolus

ஐரோப்பிய செயற்கைக்கோள் ஒன்று நேற்று அட்லாண்டிக் பெருங்கடலில் விழுந்துள்ளது. ஏயோலஸ் (Aeolus) என்று பெயரிடப்பட்ட இந்த செயற்கைக்கோள் 1,360 கிலோகிராம் எடையுள்ள வானிலை கண்காணிப்பு செயற்கைக்கோள் ஆகும். இது 2018ம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்டது. இதில் டாப்ளர் விண்ட் லிடார் எனப்படும் அதிநவீன லேசர் கருவியைக் கொண்டுள்ளது.

இது வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் காலநிலை மாதிரிகளை மேம்படுத்த, ஐரோப்பா முழுவதும் வானிலை மையங்களுக்கு தரவுகளை வழங்கி ஆராய்ச்சியாளர்களுக்கு உதவியது. ஏயோலஸ் செயற்கைக் கோளில் கடந்த மே மாதம் எரிபொருள் தீர்ந்ததால், அதன் சுற்றுப்பாதையை பராமரிக்க முடியவில்லை எனக் கூறப்படுகிறது.

Aeolus
Aeolus [Image Source : ESA]

இதனால், ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ESA) விண்வெளியில் உள்ள மற்ற விண்கலம் அல்லது செயற்கை கோளுடன் மோதும் அபாயத்தைக் குறைக்க செயற்கைக்கோளை வேண்டுமென்றே கடலில் மோதச் செய்ய முடிவு செய்தது. ஏயோலஸ் செயற்கைக்கோள் மணிக்கு சுமார் 17,500 மைல் வேகத்தில் பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழைந்ததாக கூறப்படுகிறது.

பிறகு கிரீன்லாந்தின் தெற்கே அட்லாண்டிக் பெருங்கடலில் ஏயோலஸ் செயற்கைக்கோள் விழுந்துள்ளது. செயற்கைக் கோள் கீழே விழும் திசையை மாற்றியதன் மூலம் அதில் இருந்து சிதறும் பாகங்கள், மக்கள் மற்றும் பிற பொருள்களில் மீது விழுந்து சேதத்தை ஏற்படுத்தும் அபாயம் ஆனது தடுக்கப்பட்டுள்ளது என்று ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் கூறியுள்ளது.

Aeolus
Aeolus [Image Source : ESA]

இந்த செயற்கைக்கோள் பூமியின் காற்று மாதிரிகள் பற்றிய மதிப்புமிக்க தரவுகளை வழங்கியது, இது வானிலை முன்னறிவிப்பை மேம்படுத்த உதவியது. ஏயோலஸால் சேகரிக்கப்பட்ட தரவு, பல ஆண்டுகளாக வானிலை மையங்களால் தொடர்ந்து பயன்படுத்தப்படும் என்று ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் கூறியது.

ESA
ESA [Image Source : ESA]

சுமார் 1,360 கிலோ எடையுள்ள இந்த செயற்கைக்கோள், மூன்று வருடங்கள் சுற்றுப்பாதையில் இருக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் ஏவப்பட்டது. ஆனால், அதனைத்தாண்டி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் விண்வெளியில் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்