“தேர்தல் தோல்வியை ஒப்புக்கொள்கிறேன்”.. ஆதரவாளர்கள் முன் கமலா ஹாரிஸ் பேச்சு!
அமெரிக்க அதிபர் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறேன் என வாஷிங்டனில் உள்ள ஹோவர்ட் பல்கலைக்கழகத்தில் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன் : நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மேற்பட்ட மாகாணங்களில் வெற்றி பெற்று அதிபரானார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கமலா ஹாரிஸ் அவரை விடக் குறைவாக 226 மாகாணங்களில் வெற்றி பெற்று அதிபராகும் வாய்ப்பை இழந்தார். கமலா ஹாரிஸ் தான் வெற்றிபெறுவார் என அவருடைய ஆதரவாளர்கள் எதிர்பார்த்த நிலையில், டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்றது பெரிய ஏமாற்றத்தை அளித்தது.
இந்நிலையில், தேர்தலில் தோல்வி அடைந்தது குறித்து வாஷிங்டனில் உள்ள ஹோவர்ட் பல்கலைக்கழகத்தில் தனது ஆதரவாளர்களுக்கு மத்தியில் உரையாற்றினார். இது குறித்துப் பேசிய அவர் ” தேர்தலில் தோல்வி அடைந்ததை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், எப்போதுமே நான் என்னுடைய போராட்டத்தில் தோல்வி அடைந்தேன் என்பதை ஒப்புக்கொள்ளமாட்டேன். என்னுடைய ஆசையே எல்லா மனிதர்களுக்கும் சுதந்திரம், அவர்களுக்கான வாய்ப்பு மற்றும் மரியாதை கிடைக்கவேண்டும் என்பதற்காகத் தான் இந்த அரசியல் போராட்டத்தில் இறங்கினேன்.
எனவே, தேர்தலில் தோல்வி அடைந்தாலும் நான் எப்போதும் என்னுடைய போராட்டத்தில் தோல்வி அடையவே மாட்டேன். என்னுடைய ஆதரவாளர்களுக்கும் இதற்குச் சோர்ந்து போகக்கூடாது தொடர்ந்து போராடவேண்டும். இந்த தேர்தலில் வந்த முடிவு என்பது நிச்சயமாக நாம் எதிர்பார்க்காத ஒரு முடிவு தான். இந்த முடிவுக்காகத் தயவு செய்து சோர்ந்துவிடாதீர்கள்.
அமெரிக்காவின் வாக்குறுதியின் ஒளி எப்போதும் பிரகாசமாக எரியும். நாம் இந்த தேர்தலின் முடிவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். இன்று காலை நான் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி டிரம்புடன் பேசினேன், அவருக்கு வெற்றியைக் கொண்டாடி வாழ்த்துகள் தெரிவித்தேன். எனவே எது நடந்தாலும் அது நன்மைக்குத் தான். எனவே, அனைத்து விஷயங்களையும் பாசிட்டிவாக எடுத்துக்கொள்ளுங்கள். எனக்கு வாக்கு அளித்த ஆதரவாளர்களுக்கு நான் இந்த நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனவும் ஆதரவாளர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில், கமலா ஹாரிஸ் பேசியுள்ளார்.