டிக்டாக் செயலிக்கு அமெரிக்காவில் தடை? உறுதியானது நீதிமன்ற தீர்ப்பு!
அமெரிக்காவில் டிக் டாக் செயலியை தடை செய்ய அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பை உறுதி செய்துவிட்டது. இதனை அடுத்து சில தினங்களில் டிக் டாக் செயலி அமெரிக்காவில் தடை செய்யப்படும் என கூறப்படுகிறது.
நியூ யார்க் : அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கும் நாள் நெருங்கிவிட்டது என்றே கூறவேண்டும். அதற்கான உறுதி தீர்பபை அண்மையில் அந்நாட்டு உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. அமெரிக்காவில் செயல்பாட்டில் இருக்கும் டிக் டாக் செயலி மூலம் அந்நாட்டு பயனர்களின் தரவு பாதுகாப்பு பாதிக்கப்படுவதாக தொடர் குற்றசாட்டுகள் எழுந்து வருகின்றன.
டிக் டாக் செயலியின் தரவு மேலாண்மையானது அதன் தலைமை இடமான சீனாவில் தான் உள்ளது. இதனால் அமெரிக்கர்களின் தரவுகள் பாதிக்கப்படுவதாக கூறி டிக் டாக் செயலியை தடை செய்ய வேண்டும் அல்லது அந்த செயலியை அமெரிக்க நிறுவனம் ஏதேனும் ஒன்றிற்கு விற்று அதன் கீழ் இந்த டிக் டாக் செயலி அமெரிக்கைவில் செயல்பட வேண்டும் என கூறப்பட்டது.
இந்த வழக்கு அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. அதில், டிக் டாக் செயலி தரப்பு கூறுகையில் , டிக் டாக் செயலியை அமெரிக்காவில் 170 மில்லியன் (17 கோடி) பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனை தடை செய்தால் அவர்களின் கருத்து சுதந்திரம் பறிக்கப்படும் என்றும், இதன் மூலம் பலர் வருவாய் ஈட்டி வருகின்றனர். தற்போது டிக் டாக் தடை செய்யப்பட்டால் அவர்களின் வருவாய் பாதிக்கப்படும் எண்டுறம் வாதிடப்பட்டது.
ஆனால், மேற்கண்ட வாதங்களை அமெரிக்க உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை. மேலும், ஞாயிற்று கிழமைக்குள் டிக் டாக் தாய் நிறுவனமான ByeDance நிறுவனத்தை அமெரிக்க நிறுவனத்திற்கு விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் அமெரிக்க அரசால் தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்று கிழமை (ஜனவரி 19) வரையில் ஜோ பைடன் ஆட்சி என்றாலும், டிக் டாக்கை தடை செய்யும் முடிவை ஜோ பைடன் , ஜனவரி 20இல் பொறுப்பேற்கும் டொனால்ட் டிரம்மிடம் விட்டு விடுவதாக அமெரிக்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே 2020ஆம் ஆண்டே டிக் டாக்கை தடை செய்ய வேண்டும் என டிரம்ப் குரல் கொடுத்து அதற்கான நடவடிக்கையை எடுத்தார். ஆனால் ஜோ பைடன் அரசாங்கம் அதனை நிறுத்தி வைத்தது குறிப்பிடத்தக்கது.
அதன் பிறகு பல்வேறு பாதுகாப்பு காரணங்களால் 2023-ல் டிக் டாக் செயலி தடைக்கான பேச்சுவார்த்தை தொடங்கியது. தற்போது டிக் டாக் செயலி அமெரிக்காவில் தங்கள் கடைசி கட்ட நாட்களை எண்ணி வருகிறது. இந்திய அரசு கடந்த 2020-லேயே டிக் டாக் செயலிக்கு இந்தியாவில் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.