179 பேர் பலிகொண்ட கோர விபத்தின் பகீர் பின்னணி.! றெக்கையில் சிக்கிய பறவை?
தென்கொரிய விமான விபத்தில் மொத்தம் 179 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2 பேர் மட்டுமே பலத்த காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
முவான் : நேற்று (டிசம்பர் 29) காலையில் தாய்லாந்து நாட்டில் இருந்து புறப்பட்டு வந்த ஜேஜூ விமான நிறுவனத்தின் போயிங் 737-800 என்ற விமானம் தென் கொரியாவின் முவான் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ஏற்பட்ட இடர்பாடுகளால் விமானம் பெரும் விபத்தில் சிக்கியது.
இந்த விமானத்தில் மொத்தம் 175பயணிகள் மற்றும் 6 விமான ஊழியர்கள் பயணித்துள்ளனர். இந்த கோர விபத்தில் விமானம் முழுவதும் எரிந்து சேதமானது. இதனால் தீயணைப்பு துறையினர் மீட்புப்பணிகளை தீவிரமாக மேற்கொண்டனர். விமானத்தில் பயணித்த 181 பேரில் 179 பேர் உயிரிழந்ததாக மீட்புப்பணியில் ஈடுபட்டு வந்த தென் கொரிய தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.
உயிரிழந்த 179 பேரில் 85 பேர் பெண்கள் என்றும், 84 பேர் ஆண்கள் என்றும், 10 பேரின் அடையாளங்களை இன்னும் கண்டறியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பலத்த காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்ட 2 பெரும் விமான பணிப்பெண்கள் ஆவார்.
முதற்கட்டமாக 65 பேரின் அடையாளங்கள் கண்டறியப்பட்டு அவர்கள் உறவினர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களை அடையாளம் காணும் பணி டிஎன்ஏ சோதனை மூலம் அறியப்படுகிறது. இந்த விமான விபத்து எப்படி ஏற்பட்டது என்று விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதுவரை வெளியான தகவலின் படி, விமானத்தின் தரையிறங்கும் கருவி சரியாக வேலை செய்யவில்லை என்றும், பிரேக்கிங் சிஸ்டம் பழுதடைந்தது என்றும், குறிப்பாக விமான றெக்கையில் பறவை சிக்கியது என்றும் பல்வேறு தகவல்கள் வெளியாகி கொண்டு இருக்கின்றன.
விமானத்தில் பயணித்த ஒரு பயணி, விமானம் விபத்துக்குள்ளாவதற்கு முன்பு ஒரு குறுஞ்செய்தியை தனது வீட்டினருக்கு அனுப்பியுள்ளார். அதில், நான் கடைசியாக ஒரு செய்தியை கூறுகிறேன். விமான றெக்கையில் பறவை ஒன்று சிக்கியதாக தெரிகிறது. என குறிப்பிட்டள்ளார்.
தென்கொரிய துணை போக்குவரத்து அமைச்சர் ஜூ ஜாங்-வான் அந்நாட்டு செய்தியாளர்களிடம் கூறுகையில், ஓடுபாதையின் 2,800 மீ நீளம் கொண்டது. அதனால் ஓடுபாதை விபத்துக்கு காரணி அல்ல. விமான நிலைய சுற்று சுவர்களும் விமானம் பறப்பதற்கு ஏதுவாகவே கட்டப்பட்டுள்ளன. விமானத்தில் இருந்த இரண்டு கருப்புப் பெட்டிகளும், விமான விபத்து குறித்த டேட்டா ரெக்கார்டர் மற்றும் குரல் ரெக்கார்டர் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.
விமானப் பாதுகாப்பு நிபுணரான கிறிஸ்டியன் பெக்கர்ட் அந்நாட்டு செய்தியாளர்களிடம் கூறுகையில், வீடியோ காட்சிகளை பார்க்கையில், விமானத்தில் பெரும்பாலான பிரேக்கிங் சிஸ்டம்கள் செயல்படுத்தப்படவில்லை, இது ஒரு பெரிய பிரச்சனை என்று கூறினார். மேலும், ஒரு பறவை மோதியதாக கூறப்படும் செய்தியில், விமானம் மேலே இருக்கும் போது சேதப்படுத்தியிருக்க வாய்ப்பில்லை. அது கீழே இருக்கும் போது நடந்திருந்தால், தரையிறங்க கடினமாக இருந்திருக்கும் என்றும் அவர் கூறினார்.
முவான் விமான நிலையம் அருகே ஒரு பறவைகள் பறப்பது வழக்கமான சூழல் தான் என்றும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டும் வருகின்றன. இதனால், பல்வேறு யூகங்களுக்கான பதில்கள் தென்கொரிய விபத்து குறித்த முழு விசாரணை முடிந்த பிறகே தெரியவரும் என்றே கூறப்படுகிறது.