Wow:ஸ்மார்ட்ஃபோன் இருந்தால் ஆக்ஸிஜன் அளவை அளவிடலாம்- ஆராய்ச்சியாளர்கள்
ஸ்மார்ட்ஃபோன் கேமரா மூலம் உங்களது ரத்தத்திலுள்ள ஆக்ஸிஜன் அளவை அளவிட முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
ஸ்மார்ட்ஃபோன்களின் வளர்ச்சி தற்போது, அசுர வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. வெறும், அழைப்பு மற்றும் குறுஞ்செய்தி அனுப்புவது என்று இல்லாமல் உள்ளங்கையில் உலகத்தையே கொண்டு வந்திருக்கிறது இந்த ஸ்மார்ட்ஃபோன்கள்.
அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகம் மற்றும் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் சான் டியாகோவின் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் ஸ்மார்ட்போனின் கேமரா மற்றும் ஃபிளாஷ் ஆல், இரத்தத்தின் ஆக்ஸிஜன் அளவை அளவிட முடியும் என்று கண்டறிந்துள்ளனர்.
இதற்காக ஆராய்ச்சியாளர்கள் ஒரு குழுவை உருவாக்கி, ஒவ்வொருவரையும் தங்கள் விரல்களை போனின் கேமரா மற்றும் பிளாஷ் பகுதியில் வைக்க அறிவுறுத்தினார்கள் ,பின்னர் ஃபிளாஷ் ஐ ஆன் செய்து விரல்களில் ஓடும் ரத்தத்தின் மீது ஒளிக்கற்றைகளை படுமாறு வைத்து ஆக்ஸிஜன் அளவை அளவிட்டுள்ளனர்.
ஸ்மார்ட்போன் இரத்த ஆக்ஸிஜன் அளவை 70% வரை அளவிட முடியும் என்று ஆராய்ச்சி ஆய்வு நிரூபிக்கிறது. நாங்கள் இந்த ஆராய்ச்சியின் ஆரம்ப கட்டத்தில் உள்ளோம் மேலும் ஒரு குறிப்பிட்ட ஸ்மார்ட்போன் மாடலில் மட்டுமே சோதனை செய்யப்பட்டுள்ளது, வருங்காலத்தில் அனைத்து மாடல் போனிலும் இதை கொண்டுவருவதற்கான முயற்சியில் இருக்கிறோம் என்று உறுதி அளித்துள்ளனர்.