கொரோனா வைரஸ் மூளையை பாதிக்குமா.? வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்.!
கொரோனா தொற்றுக்கு காரணமான SARS-CoV2 எனும் வைரஸ் மனித மூளையை பாதிக்கும் திறன் கொண்டது என பன்னாட்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
கோவிட்-19 : 2019ஆம் ஆண்டு சீனாவில் உருவாகி, பரவ தொடங்கி சுமார் 2 ஆண்டுகள் உலகையே உலுக்கிய கொரோனா பெருந்தொற்று பற்றி தற்போது மேலும் ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. கொரோனா தொற்றுக்கு காரணமான SARS-CoV-2 எனும் வைரஸ் மனித மூளையை பாதிக்க செய்யும் என ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது. அந்த வைரஸ் மனித செல் புரதத்தில் உள்ள பிறழ்வுகளின் வழியாக மூளை செல்களுக்கு நுழையும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இதனை சில கொரோனா தொற்று நோயாளிகளிடம் பெறப்பட்ட மருத்துவ ரிப்போர்ட் மூலம் உறுதிப்படுத்தியுள்ளனர். அதில், அந்த நோயாளிகளுக்கு மூளை நரம்பியல் தொடர்பான அறிகுறிகள் இருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆய்வறிக்கையானது மரபணு ரீதியாக வடிவமைக்கப்பட்ட எலிகள் மீதான ஆராய்ச்சியிலிருந்து பெறப்பட்டது. இந்த அறிக்கை மூலம் ஒரு வைரஸ் மூளையை எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் பற்றிய பல்வேறு தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன் கதவு – பின் கதவு :
நேச்சர் மைக்ரோபயாலஜி (Nature Microbiology journal) எனும் பன்னாட்டு மாத பத்திரிகையில் இந்த ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, பொதுவாக ஒரு செல் மேற்பரப்பில் உள்ள ACE2 ஏற்பிகளுடன் பிணைப்பதன் மூலம் செல்களுக்குள் வைரஸ் நுழைய உதவுகிறது. இதனை முன் கதவு வழியாக வைரஸ் நுழைகிறது என்பார்கள். இருப்பினும், இந்த வழி மாற்றப்படும்போது அல்லது அகற்றப்படும்போது, செல்களுக்குள் நுழைவதற்கு வைரஸ் வேறு பாதையை (பின் கதவு) பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
அவ்வாறு செல்களின் பின் கதவு வழியாக கொரோனா வைரஸ் நுழைந்தால், அது மூளை செல்களை தாக்குவதற்கு எற்ப்புடையதாக அமைகிறது. இந்த அறிகுறிகள் சில COVID-19 நோயாளிகளிடம் கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம், மூளை மூடுபனி, தலைச்சுற்றல் மற்றும் நினைவக பிரச்சினைகள் போன்ற நரம்பியல் பிரச்சினைகளை நோயாளிகள் அனுபவித்துள்ளார் என கூறப்பட்டுள்ளது.
எலிகளின் ஆராய்ச்சி முடிவுகள் :
மனித ACE2 ஏற்பிகள் கொண்ட மரபணு மாற்றப்பட்ட எலிகள் மீது ஆராய்ச்சியாளர்கள் இதற்கான சோதனைகளை மேற்கொண்டனர். இது வைரஸ் செல்களின் பின் கதவு வழியாக நுழைவதை இலக்காகக் கொண்டு செயல்படுத்தப்பட்டது. இந்த எலிகளை SARS-CoV-2 வைரஸ் பாதித்த பிறகு, ஆராய்ச்சியாளர்கள், எலிகளின் நுரையீரல் மற்றும் மூளை திசுக்களில் இருந்த வைரஸ் மரபணுக்களை ஆய்வு செய்தனர். மூளை செல்களில் குறிப்பாக ஹிப்போகாம்பஸ் மற்றும் ப்ரீமோட்டர் கார்டெக்ஸ் போன்ற நினைவகம் மற்றும் மூளை இயக்கம் தொடர்பான பகுதிகளில், பிறழ்வு கொண்ட வைரஸ் இருந்தது என்று முடிவுகள் வெளியாகியுள்ளன.
மனிதர்களிடத்தில் தாக்கங்கள் :
இந்த ஆராய்ச்சி அறிக்கைகள் கவனிக்கத்தக்கவை என்று கூறினாலும் , இவை அனைத்தும் ஆய்வு எலிகளிடம் மட்டுமே நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஆராய்ச்சி முடிவுகள் மனிதர்களுக்கும் பொருந்துமா என்பதைத் தீர்மானிக்க மேலும் சில ஆராய்ச்சி முடிவுகள் அவசியம். இந்த ஆய்வின் இணை ஆசிரியரான ஜூட் ஹல்ட்கிஸ்ட் கூறுகையில், ” இந்த கொரோனா வைரஸ் பிறழ்வுகள் ஏன் மூளைக்குள் நுழைய அதிக வாய்ப்புள்ளது என்பதை ஆராய விஞ்ஞானிகள் ஆர்வமாக உள்ளனர். COVID-19 இன் நரம்பியல் பாதிப்புகளை இலக்காக கொண்ட சிகிச்சைகளை மேற்கொள்வதற்கு, இந்த ஆராய்ச்சிகளை மனிதர்களிடத்தில் தீவிரமாக மேற்கொள்வது அவசியமான ஒன்றாக உள்ளது” என கூறினார்.
எதிர்கால ஆராய்ச்சிகள் :
COVID-19இன் வைரஸால் மூளை நரம்புகள் பாதிக்கப்பட்டு இருந்தால், அதற்கு மேற்கொள்ளும் சிகிச்சைக்கு இந்த ஆய்வறிக்கைகள் பெரிதும் உதவும். மூளை செல்களைப் பாதிக்க வைரஸ் பயன்படுத்தும் பாதையை அடையாளம் காண்பதன் மூலம், கொரோனா வைரஸ் மூளையை பாதிக்கும் வாய்ப்பை தடுக்கக்கூடிய மருந்துகளை உருவாக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். வைரஸுடன் தொடர்புடைய நீண்டகால நரம்பியல் சிக்கல்களைத் தடுப்பதில் இத்தகைய ஆராய்ச்சி முடிவுகள், அதற்கான சிகிச்சைகள் பயனுள்ளதாக இருக்கும். இருப்பினும், இந்த ஆராய்ச்சி முடிவுகளை மனிதர்களுக்கு பயனுள்ள மாற்ற எலிகள் மீது மேற்கொள்ளப்பட்ட சிகிச்சையை அடுத்தகட்டத்திற்கு எடுத்து செல்ல வேண்டும் என்றும் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.