மனைவி முன் ஹீரோவாக வேண்டுமா? ‘நானும் ரவுடி தான்’ பாணியில் வினோதமாக பணம் வசூலிக்கும் நபர்!
மனைவி முன்பே நீங்கள் ஒருவரை அடித்து உதைத்து ஹீரோவாக கனவு காண்கிறீர்களா? உடனே இவருக்கு போன் பண்ணுங்க.
மலேசியா : சினிமாவில் ஹீரோ எப்படி தனது குடும்பத்தினரையும் நண்பர்களையும் வில்லனிடமிருந்து காப்பாற்றுகிறார். அதேபோல், திரைப்படங்களில் வருவதுபோல் வில்லனாக நடிக்க, பணம் வசூலிக்கிறார் மலேசியாவைச் சேர்ந்த பெசகிட் சிகார் ககார் மோன்யெட் என்ற நபர்.
அட ஆமாங்க… சினிமாவைப் போல வாழ்க்கையிலும் ஹீரோவாக வாய்ப்பு கிடைத்தால்? எப்படி இருக்கும். 28 வயதுடைய மலேசிய இளைஞர் ஒருவர் இப்படியொரு விளம்பரம் செய்துள்ளார்.
அதில், காதலியின் முன் தன்னை ஹீரோவாக காட்டிக்கொள்ள விரும்பும் நபர்கள் தன்னை தொடர்பு கொள்ளலாம் எனவும், ஒரு நாடகம் போட்டு தான் அதில் அடிவாங்குபவர் போல் நடிப்பேன் எனவும் தெரிவித்துள்ளார். இதற்கு ஆண்கள் மட்டுமன்றி பெண்களும் விண்ணப்பிக்கலாம் எனவும் கூறியுள்ளார்.
அதாவது, கணவர் இல்லாத நேரத்தில் மனைவிக்கு தொல்லை கொடுத்து பின்னர் கணவர் வந்தால், அடி வாங்கி அவரை ஹீரோவாக மாற்றுவேன் என்கிறார். இதற்கு வார நாட்களில் 1,975 ரூபாயும் , அதுவே வார இறுதி நாட்களில் (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை) ரூ.2,963 சார்ஜ் செய்வதாக தெரிவித்துள்ளார்.
மேலும், ‘நேரத்தையும் இடத்தையும் சொல்லங்க. நான் உங்கள் துணையை தொந்தரவு செய்வது போல் நடிப்பேன்’. அப்புறம் நீங்க ஹீரோ மாதிரி வந்து காப்பாத்தணும்’ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில் அந்த இளைஞர் தனது புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இளைஞன் புகைப்படத்தில் வாயில் சிகரெட் உடன் வில்லத்தனமான தோற்றத்தில் நிற்கிறார்.
இது நமக்கு விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவும் நடித்த ‘நானும் ரவுடி தான்’ படத்தில் வரும் காட்சியை நினைவூட்டுகிறது.