ஆட்குறைப்பில் இறங்கிய முன்னணி லேப்டாப் தயாரிப்பு நிறுவனம்.! 6,650 ஊழியர்களுக்கு வேலை இல்லை.!
டெல் நிறுவனம் அதன் உலக அளவில் உள்ள பணியாளர்களில் 6,650 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளது.
உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்று வந்த பல்வேறு தொழிநுட்ப நிறுவனங்கள் கடந்த சில மாதங்களாக பணி நீக்கங்களை அறிவித்து வருகிறது. இதில் டெல் டெக்னாலஜிஸ் (Dell Technologies Inc), தனிநபர் கணினிகளுக்கான (பெர்சனல் கம்ப்யூட்டர்) தேவை குறைந்து வருவதால், சுமார் 6,650 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது உலக அளவில் உள்ள அதன் பணியாளர்களில் 5% ஆகும்.
இதேபோன்ற பணிநீக்கம் 2020-இல் கொரோனா தொற்றுநோய் பரவலின் போது அறிவிக்கப்பட்டது. 2022 ஆம் ஆண்டில் நான்காவது காலாண்டில் தனி நபர் கணினிகளுக்கான ஏற்றுமதி கடுமையாக குறைந்தது. இதனால் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான டெல் டெக்னாலஜிஸ் அதன் வருவாயில் பெரிய சரிவைக் கண்டது. 2021 ஆம் ஆண்டு இதே காலண்டியில் ஒப்பிடும் பொழுது 55% வருமானம் டெல் அதன் கணினி தயாரிப்பிலிருந்து பெற்றது.
பங்குச்சந்தையில் நிறுவனத்தின் பங்குகள் தொடர்ந்து குறைந்து கொண்டே வரும் நிலைமையில் உள்ளதால் நிறுவனத்தின் எதிர்காலம் நிச்சயமற்ற கேள்விக்குறிவுடன் இருக்கிறது என்று நிறுவன இணை-தலைமை இயக்க அதிகாரி ஜெஃப் கிளார்க் கூறியுள்ளார். தொழிநுட்ப நிறுவனமான எச்.பி (HP.inc), கடந்த நவம்பர் மாதம் தனிநபர் கணினிகளுக்கான தேவை குறைந்து வருவதால், அடுத்த மூன்று ஆண்டுகளில் 6,000 ஊழியர்களை பணிநீக்கம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.