கணவன் – மனைவி சண்டை.! டெல்லியில் தரையிறங்கிய பாங்காங் விமானம்.!
இன்று (புதன்கிழமை) ஜெர்மனி, முனிச் நகர் விமான நிலையத்தில் இருந்து லுஃப்தான்சா விமான எண் LH772 எனும் விமானம் பாங்காங்க் நோக்கி புறப்பட்டது. அந்த விமானத்தில் ஜெர்மனியை சேர்ந்த கணவனும், தாய்லாந்தை சேர்ந்த அவரது மனைவியும் பயணித்துள்ளனர்.
விமானம் பறந்து கொண்டிருக்கும் சமயம், கணவன் மனைவி இடையே பிரச்சனை எழுந்ததாக தெரிகிறது. உடனே தாய்லாந்தை சேர்ந்த அந்த பெண் விமானியிடம் இதனை கூறியுள்ளார். தன் கணவரால் தனக்கு ஆபத்து இருக்கிறது என புகார் கூறியுள்ளார்.
இந்த விவகாரம் தீவிரமடைந்ததை அடுத்து உடனடியாக விமானி விமானத்தை பாதியில் தரையிறக்க முதலில் பாகிஸ்தான் அரசிடம் அங்குள்ள விமான நிலையத்தில் தரையிறக்க அனுமதி கோரியுள்ளார். ஆனால், அதனை அந்நாட்டு விமான நிலையம் மறுத்துவிட்டது.
இதனை அடுத்து, டெல்லி விமான நிலையத்தில் பாங்காங்க் விமானம் தரையிறங்க அனுமதி கேட்கப்பட்டது. உடனடியாக அனுமதி வழங்கப்பட்டவுடன், விமானம் டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கியது. அதன் பிறகு விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு ஜெர்மன் நாட்டை சேர்ந்தவர் விமானப்படை பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார் .
தான் செய்த தவறுக்கு அந்த நபர் பாதுகாப்பு அதிகாரிகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். அதன் பிறகு அவரை அதே விமானத்தில் அனுப்பலாமா அல்லது வேறு வழியில் அவரை ஊருக்கு அனுப்பலாமா என விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
தற்போது தான் தரையிறங்கிய காரணத்தால் சற்று நேரம் டெல்லி விமான நிலையத்தில் பராமரிப்பு பணிக்காக பாங்காங் விமானம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.