71 பேர் பலி! திருமண விழாவிற்கு செல்கையில் சோக நிகழ்வு!
தெற்கு எத்தியோபியால் கெலன் பாலத்தில் டிரக் கவிழ்ந்த விபத்தில் இதுவரை 71 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அடிஸ் அபாபா : எதியோப்பியா நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள தெற்கு சிடமா மாநிலத்தில் உள்ள போனோ பகுதியில் (தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து 300கிமீ தொலைவில்) உள்ள ஆற்று பாலத்தில் நேற்று ஒரு கோர விபத்து ஏற்பட்டு 66 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
போனோ பகுதியில் நடைபெற இருந்த ஒரு திருமண நிகழ்ச்சிக்காக திருமண வீட்டார், ஒரு டிரக்கில் (லாரி) சென்றுகொண்டிருந்தனர். அப்போது, கெலன் பாலத்தில் டிரக் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்துள்ளது. இந்த பயங்கர விபத்தில் ஆற்றில் மூழ்கி 64 பேர் உயிரிழந்தனர் என முதற்கட்டமாக தெரிவிக்கப்பட்டது.
அந்த பகுதி கிராமப்பகுதி என்பதால், மீட்பு உதவிகள் வர தாமதம் ஆனது என உள்ளூர்வாசிகள் அந்நாட்டு ஊடகத்தினரிடம் கூறியுள்ளனர். இதனால், உயிரிழப்புகள் அதிகரித்துவிட்டன என்றும் கூறியுள்ளனர். மீப்புப்பணிகள் உதவியுடன் மீட்கப்பட்டதில் பலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் மருத்துவமனையிலும் சிலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
போனா பொது மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர், லெம்மா லாகிடே திங்களன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ” 64 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டனர். மேலும் 2 பேர் மருத்துவமனையில் உயிரிழந்தனர். மேல் சிகிச்சை தேவைப்படுவோர், ஹவாசாவில் உள்ள பெரிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.” என்று அவர் தெரிவித்தார்.
தற்போது வெளியான தகவலின்படி, பலி எண்ணிக்கை 71ஆக உயர்ந்துள்ளது என்றும் , உயிரிழந்ததில் 68 பேர் ஆண்கள் என்றும், 3 பேர் பெண்கள் என்றும் அடையாளம் காணப்பட்டதாக கிடாமா பகுதி காவல்துறை உயர் அதிகாரி தெரிவித்ததாக தனியார் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வருகின்றன.