அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் இடம்பெற்ற 6 இந்திய வம்சாவளியினர்!
அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நேற்று இந்திய வம்சாவளியை சேர்ந்த 6 நபர்கள் பிரதிநிதிகளாக பொறுப்பேற்று கொண்டனர்.
நியூ யார்க் : அமெரிக்காவில் அண்மையில் தேர்தல் முடிந்து குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் அதிபராக வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து இம்மாதம் அவர் அதிபராக பதவி ஏற்க உள்ளார். அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது . அதற்கிடையில், அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் (அந்நாட்டு எம்பிகள்) உறுப்பினர்கள் பதவியேற்று வருகின்றனர்.
நேற்று (ஜனவரி 3) அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் இருந்து 6 இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்கர்கள், அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் பதவி ஏற்றனர். இவர்கள் அனைவரும் ஜனநாயக கட்சியை சேர்ந்தவர்கள் ஆவார். இந்த முறையே இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் அதிகம் பேர் பிரதிநிதிகள் சபையில் பதவியேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கலிபோர்னியா மாகாணத்தின் 7வது மாவட்டமான சேக்ரமென்டோவின் பிரதிநிதியாக டாக்டர் அமி பெரா பொறுப்பேற்றார் . இவர் அமெரிக்க காங்கிரஸ் மூத்த தலைவர் ஆவார். தனது பதவி ஏற்புக்கு பிறகு எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பெரா, “அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நான் 12 ஆண்டுகளுக்கு முன்பு தேர்வு செய்யப்பட்ட போது, நான் ஒருவன் மட்டுமே அமெரிக்க காங்கிரஸை சேர்ந்தவன். தற்போது இந்த எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது” என பதிவிட்டார். நேற்று பதவியேற்ற அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களில் மூத்த உறுப்பினர் பெரா ஆவார்.
வர்ஜீனியா மாகாணத்தின் 10வது மாவட்ட உறுப்பினராக சுஹாஷ் சுப்ரமணியன் பதவி ஏற்றார். இவர் தற்போது தான் முதன் முறையாக பிரதிநிதிகள் சபையில் உறுப்பினராக பொறுப்பேற்றுள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்கர் ஆவார்.
மிச்சிகனின் 13வது மாவட்டமான வெய்ன் கவுன்டியின் பிரதிநிதியாக அமெரிக்க காங்கிரஸார் ஸ்ரீ தானேதர் பொறுப்பேற்றார். கலிபோர்னியாவின் 17வது மாவட்ட பிரதிநிதியாக ரோ கன்னா பொறுப்பேற்றார். இல்லினாய்ஸ் மாகாணத்தின் 8வது மாவட்டத்தை சேந்த பிரதிநிதியாக ராஜா கிருஷ்ணமூர்த்தி பொறுப்பேற்றார்.
வாஷிங்டன் மாகாணத்தின் 7வது மாவட்ட பிரதிநிதியாக அமெரிக்க காங்கிரஸ் பெண் உறுப்பினர் பிரமிளா ஜெயபால் பொறுப்பேற்றார். அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் இந்திய வம்சாவளி அமெரிக்க பெண்மணி ஆவார்.
இவர்கள் அனைவரும், அமெரிக்க அவைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் ஹக்கீம் ஜெஃப்ரிஸுக்கு வாக்களித்தனர். ஆனால், வழக்கம் போல, தற்போது தேர்தலில் ஜெயித்துள்ள குடியரசுக் கட்சியைச் சேர்ந்த மைக் ஜான்சன் சபை சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார்.