மர்ம நோயினால் 5 பேர் உயிரிழப்பு..! மேலும் 7 பேருக்கு அறிகுறி..!
தான்சானியாவில் மர்ம நோயினால் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
மர்ம நோய்:
கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடான தான்சானியாவில் பரவி வரும் மர்ம நோயினால் 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் 7 பேருக்கு நோய் அறிகுறிகள் இருப்பதாகவும் பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த மர்ம நோய் பற்றி விசாரிக்க உகாண்டாவுடன் தனது எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் நாட்டின் வடமேற்குப் பகுதியில் உள்ள ககேரா பகுதிக்கு நிபுணர்கள் குழுவை அந்நாட்டு அரசாங்கம் அனுப்பியுள்ளது.
அறிகுறிகள்:
தான்சானியாவின் சுகாதார அமைச்சகத்தின் உறுப்பினரான சுகாதார அதிகாரி துமைனி நாகு, “நோயின் மூலத்தையும் வகையையும் அடையாளம் காண நோயாளிகள் மற்றும் இறந்தவர்களிடமிருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன” என்று கூறினார். “காய்ச்சல், வாந்தி, ரத்தக்கசிவு மற்றும் சிறுநீரக செயலிழப்பு உள்ளிட்ட அறிகுறிகள் இந்த மர்ம நோயைக் கண்டறிய கூடிய அறிகுறிகள்” என்று அவர் மேலும் கூறினார்.
லெப்டோஸ்பிரோசிஸ்:
தான்சானியா நாட்டில் தற்பொழுது பரவி வரும் மர்ம நோய்க்கு முன்பே மற்றொரு நோய் பரவியுள்ளது. அது லெப்டோஸ்பிரோசிஸ் அல்லது எலி காய்ச்சல் என அடையாளம் காணப்பட்டது. இதனால் நாட்டின் தென்கிழக்கு பிராந்தியமான லிண்டியில் மூன்று பேர் உயிரிழந்தனர். லெப்டோஸ்பிரோசிஸ் என்பது ஒரு பாக்டீரியா நோயாகும் இது பாலூட்டிகளால் அல்லது பாதிக்கப்பட்ட விலங்கின் சிறுநீர் அல்லது மலம் மூலம் மாசுபடுத்தப்பட்ட உணவு மற்றும் நீர் மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது.