இன்றுவரை ஹமாஸ் மீதான தாக்குதலுக்கு ரூ.37,350 கோடி செலவு.! இஸ்ரேல் நிதியமைச்சர் தகவல்.!
கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி தென்மேற்கு பாலஸ்தீன பகுதியான காசாவில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகள் மூலம், மத்திய கிழக்கில் உள்ள நாடான இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் போர் நிலையை அறிவித்து பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.
இன்றுவரைத் தொடர்ந்து 19 நாட்களாக இஸ்ரேல், காசா எல்லைப் பகுதியைக் குறிவைத்து ராக்கெட்டுகள் மற்றும் குண்டுகள் வீசி தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த தாக்குதலால் காசாவில் 5,000-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்ததோடு, 15,000-க்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்துள்ளனர். இதில் 2,055 குழந்தைகள் மற்றும் 1,119 பெண்கள் அடங்குவர்.
இருந்தும் இஸ்ரேல், காசா மீதான வான்வெளி மற்றும் தரைவழி தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருகிறது. அதன்படி, தற்போது மேற்கு கரை, காசா மற்றும் வடக்கு பகுதிகளில் இஸ்ரேல் ராக்கெட்டுகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. காசா கடற்கரை பகுதியில் சுரங்கப்பாதை வழியாக சென்றுகொண்டிருந்தவர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த அக்டோபர் 7ம் தேதி முதல் ஹமாஸ் அமைப்பினர் மீதான தாக்குதலுக்கு இதுவரை ரூ.37.350 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேலின் நிதியமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் கூறியுள்ளார். அதன்படி, இஸ்ரேலுக்கு ஒரு நாளைக்கு சுமார் 1 பில்லியன் ஷேக்கல்கள் ($246 மில்லியன் அல்லது ரூ.24.6 கோடி) போருக்கான நேரடிச் செலவு என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலில் குடியிருப்புகள் மற்றும் வாகனங்கள் சேதம் அடைந்துள்ளதால், இதனை சரி செய்ய அதிக செலவு ஆகும். இதனால் காசா போரைக் கருத்தில் கொண்டு 2023-2024 தேசிய வரவுசெலவுத் திட்டம் இனி பொருந்தாது என்றும் அந்த திட்டம் திருத்தப்படும் என்றும் இஸ்ரேலின் நிதி அமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் கூறினார். இதற்கு மத்தியில் 1,500 பேர் காணாமல் போயுள்ளனர். காணாமல் போனவர்களில் 830 பேர் குழந்தைகள் எனவும் காசா சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.