ஈரான் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் 31 பேர் பலி
ஈரானில் பூதாகரமாக வெடித்துள்ள 22 வயது மஹ்சா அமினியின் மரணத்தை எதிர்த்து, 30க்கும் மேற்பட்ட நகரங்களில் போராட்டம் வெடித்துள்ளது.
கடந்த வாரம் ,ஹிஜாப் முறையாக அணியாததாகக் கூறி மஹ்சா அமினி காவல் துறை விசாரணையில் வைத்து அடித்துக் கொல்லப்பட்டார். இதனால் தற்போது போராட்டம் ஈரானின் பல இடங்களில் வெடித்து வருகிறது.
ஒஸ்லோ வைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் கூறிய தகவலின் படி, போராட்டக்காரர்களை அடக்க ஈரானிய பாதுகாப்பு படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்களில் 31 பேர் கொல்லப்பட்டனர் என்று கூறியுள்ளது.
ஈரான் மனித உரிமைகள் (IHR) இயக்குனர் மஹ்மூத் அமிரி-மொகத்தம், வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரானிய மக்கள் தங்கள் அடிப்படை உரிமைகளை அடைவதற்காக வீதிக்கு இறங்கி அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர். ஆனால், அரசாங்கம் மக்களுக்கு தோட்டாக்களால் பதிலடி கொடுக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
போராட்டம் முதலில் வடக்கு குர்திஸ்தான் பகுதியில் தொடங்கியது, அதன் பிறகு தற்போது ஈரான் முழுதும் பரவியுள்ளது. வடகிழக்கு நகரமான டப்ரிஸ்ஸில், நடைபெற்ற போராட்டத்தின் போது முதல் நபர் கொல்லப்பட்டதாக ஈரான் மனித உரிமைகள் தகவல் தெரிவித்துள்ளது.