ரஷ்யப் போரில் எங்கள் நாட்டின் 262 விளையாட்டு வீரர்கள் கொல்லப்பட்டனர்..! உக்ரைன்
ரஷ்யப் போரில் தங்கள் நாட்டின் 262 விளையாட்டு வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே நடைபெற்றுக் கொண்டிருக்கும் போரில் 262 உக்ரைன் விளையாட்டு வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைனின் விளையாட்டு அமைச்சர் வாடிம் ஹட்சைட் தெரிவித்துள்ளார். சர்வதேச ஜிம்னாஸ்டிக்ஸ் கூட்டமைப்பின் தலைவர் மொரினாரி வதனாபேவை சந்தித்த உக்ரைனின் விளையாட்டு அமைச்சர் வாடிம் ஹட்சைட், ரஷ்யாவைச் சேர்ந்த எந்த விளையாட்டு வீரர்களும் ஒலிம்பிக் அல்லது பிற விளையாட்டுப் போட்டிகளில் விளையாட அனுமதிக்கப்படக் கூடாது என்று கூறியுள்ளார்.
மேலும், உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரில் 262 உக்ரேனிய விளையாட்டு வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும், விளையாட்டு மைதானம் மற்றும் பொருள்கள் உட்பட 363 விளையாட்டு வசதிகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் வாடிம் ஹட்சைட் தெரிவித்தார். இதையடுத்து, ரஷ்யா விளையாட்டு வீரர்கள் அனைவரும் இந்த போரை ஆதரிக்கிறார்கள் மற்றும் இந்த போருக்கு ஆதரவாக நடைபெறும் நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார்கள் என்று குற்றம் சாட்டினார்.
இதற்கிடையில், 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் அவர்கள் பங்கேற்பது குறித்து முடிவு செய்யவில்லை. மேலும், உக்ரைனின் விளையாட்டு வீரர்கள் ரஷ்யர்களுக்கு எதிராக விளையாட்டுகளில் போட்டியிட வேண்டியிருந்தால், 2024 ஒலிம்பிக் போட்டிகளுக்கான தகுதிப் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று உக்ரைன் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.