சீனாவிலிருந்து கடனாகப் பெற்ற 21 வயது பாண்டா மரணம்.! தாய்லாந்து இரங்கல்…
சீனாவிலிருந்து கடனாக கொண்டுவரப்பட்ட லின் ஹுய் என்ற பாண்டா உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் இருந்து தாய்லாந்துக்கு கடனாக கொண்டுவரப்பட்ட 21 வயதான லின் ஹுய் என்ற பெயர் கொண்ட ராட்சத பாண்டா இன்று இறந்துள்ளது என அந்நாட்டு மிருகக்காட்சி சாலை தெரிவித்துள்ளது. இந்த லின் ஹுய் என்ற பாண்டா 24 மணிநேர “பாண்டா சேனல்” மூலம் விலங்கு பிரியர்களை கவர்ந்தது. தாய்லாந்தில் உள்ள மூன்று பாண்டாக்களில் லின் ஹுய் கடைசிப் பாண்டாவாகும்.
பாண்டாவின் இறப்பு குறித்து மிருகக்காட்சிசாலையின் இயக்குனர் வுத்திச்சாய் முவாங்மேன் கூறுகையில், பாண்டாவிற்கு மூக்கில் இருந்து ரத்தம் கசிந்ததாகவும், ஆபத்தான நிலையில் இருந்த பாண்டா அதிகாலை மரணம் அடைந்ததாகவும் தெரிவித்தார். மேலும், லின் ஹுய் எங்களை விட்டுப் பிரியும் வரை எங்களால் முடிந்த உதவி செய்ததாகவும் கூறினார்.
இந்த பாண்டாவின் பிரேதப் பரிசோதனையை, தாய்லாந்தின் விலங்கியல் பூங்கா அமைப்பின் தலைவர் டெஜ்பூன் மப்ராசெர்ட், சீன மற்றும் தாய்லாந்து நிபுணர்கள் கூட்டாக இணைந்து நடத்துவார்கள் என்றும் லின் ஹுயின் இறப்புக்காக தாய்லாந்து, சீனாவுக்கு 15 மில்லியன் பாட் ($435,000) காப்பீடு செலுத்த வேண்டும் என்று வுத்திச்சாய் கூறினார்.
கடந்த 2009 மற்றும் 2012 க்கு இடையில் 24 மணிநேர பாண்டா சேனல் நேரடி ஒளிபரப்பின் மூலம் விலங்கு பிரியர்களை கவர்ந்த லின் ஹுயின் மரணம் குறித்து ரசிகர்கள் சமூக ஊடகங்களில் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு லின் ஹுயின் இணையான சுவாங் சுவாங் என்ற பாண்டா இறந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.