பொது இடங்களில் ஹிஜாப் அணியாத 2 நடிகைகள்..! ஈரான் குற்றம் சாட்டு..!
ஈரானில் பிரபல நடிகைகள் இருவர் பொது இடங்களில் ஹிஜாப் அணியாமல், புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
ஈரானில் பிரபல நடிகைகள் இருவர் பொது இடங்களில் ஹிஜாப் அணியாமல், புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். கடந்த 1979 இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு பெண்கள் பொது இடங்களில் ஹிஜாப் அணிய வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது. ஆனால், அந்த நிபந்தனையை மீறி கடந்த வாரம், 53 வயதான பான்டியா பஹ்ராம் ஒரு படப்பிடிப்பின் போது ஹிஜாப் அணியாமல் புகைப்படம் எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார்.
அதேநேரத்தில், 61 வயதான கட்டயோன் ரியாஹி, ஹிஜாப் அணியாமல் தெஹ்ரானைச் சுற்றியுள்ள பொது இடங்களில் எடுக்கப்பட்ட பல புகைப்படங்களை வெளியிட்டார். அவர்கள் இருவரும் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானதையடுத்து, தெஹ்ரானில் உள்ள காவல்துறை, ரியாஹி மற்றும் பஹ்ராம் ஆகியோருக்கு எதிரான வழக்கை ஈரானின் நீதித்துறைக்கு பரிந்துரைத்துள்ளது. இதையடுத்து அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டால், இருவரும் அபராதம் அல்லது சிறை தண்டனையை எதிர்கொள்ள நேரிடும்.
முன்னதாக, ஈரானின் கட்டாய ஆடைக் குறியீட்டை மீறும் பெண்களை கண்டுபிடிக்க பொது இடங்களில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்குவதாக போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில், இவர்கள் இவர்மீதும் இந்த குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. மேலும், ரியாஹி மற்றும் பஹ்ராம் ஆகியோர் ஈரானின் முன்னணி சினிமா நிகழ்வான ஃபஜ்ர் (Fajr) சர்வதேச திரைப்பட விழாவில் பல விருதுகளை வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.