30 பேர் சுட்டுக்கொலை! 190 பேர் மீட்பு! மற்றவர்கள் நிலை? பாக். ரயில் கடத்தல் அப்டேட்…
பாகிஸ்தான் ரயில் கடத்தலில் இதுவரை 190 பேர் மீட்கப்பட்டதாகவும், 30 கிளர்ச்சியாளர்களை பாக். ராணுவம் சுட்டு கொன்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று போலன் மாவட்டத்தில் பலுசிஸ்தான் கிளர்ச்சி அமைப்பான பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் (BLA) கடத்தியது. பாகிஸ்தான் எல்லைக்குள், ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகே அமைத்துள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் செயல்படும் தடைசெய்யப்பட்ட BLA கிளர்ச்சியாளர்கள், பலுசிஸ்தான் மாகாணத்தை தனியாக பிரிக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
500 பயணிகள் :
BLA கடத்திய பயணிகள் ரயிலில் மொத்தம் 9 பெட்டிகளில் சுமார் 500 பயணிகள் இருந்துள்ளனர். இவர்களில் 20 பேரை BLA கிளர்ச்சியாளர்கள் கொன்றதாகவும், ஒரு ட்ரோனை சுட்டு வீழ்த்தியதாகவும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் நேற்று செய்தி வெளியிட்டிருந்தது. பயணிகளை பணய கைதிகளாக BLA கிளர்ச்சியாளர்கள் பிடித்து வைத்ததாகவும், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், பலுசிஸ்தான் மாகாணத்தை சேர்ந்தவர்களை அவர்கள் விடுவித்ததாகவும் செய்திகள் வெளியாகின.
பயணிகளை கொன்று விடுவோம்
பாகிஸ்தான் ராணுவம் தங்களை தாக்க முற்பட்டால் பயணிகளை கொன்று விடுவோம் என BLA கிளர்ச்சியாளர்கள் எச்சரித்திருந்தனர். இப்படியான சூழலில் நேற்று இரவு, கடத்தப்பட்ட பகுதிக்கு மீட்புக் குழுவினரும் பாதுகாப்புப் படையினரும் சென்றுள்ளனர் அதன் பிறகு பணய கைதிகளை மீட்கும் பணியில் பாகிஸ்தான் ராணுவம் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகிறது.
190 பயணிகள் மீட்பு
AFP செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இதுவரை 190 பயணிகள் கிளர்ச்சியாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளனர் என்றும், 30 BLA கிளர்ச்சியாளர்களை பாகிஸ்தான் ராணுவம் சுட்டு கொன்றுள்ளனர் என்றும் தகவல் வெளியிட்டுள்ளது. இன்னும் பணய கைதிகள் BLA கிளர்ச்சியாளர்கள் வசம் இருப்பதாகவும் அந்த கிளர்ச்சியாளர்களிடம் தற்கொலை படையினரும் இருக்கலாம் என AFP செய்தி நிறுவனத்திடம் பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.
இன்னும் பணய கைதிகள் விடுவிக்கப்பட வேண்டியுள்ளதால் அடுத்தகட்ட நடவடிக்கையை மிகவும் எச்சரிக்கையுடன் நகர்த்தி வருவதாகவும் அந்த பாதுகாப்பு அதிகாரி AFPயிடம் தெரிவித்துள்ளார்.
5 இடங்களில் பணய கைதிகள் :
இந்த BLA கிளர்ச்சியாளர்கள் இன்னும் சுமார் 200 பயணிகளை துப்பாக்கி முனையில் கடத்தி அருகில் உள்ள மலைப்பகுதிகள் உள்ளிட்ட 5 இடங்களில் பணய கைதிகளாக வைத்துள்ளனர் என்றும் பாகிஸ்தான் அரசு தரப்பில் செய்திகள் வெளியாகி வருகிறது . அவர்களை மீட்கும் நடவடிக்கையிலும் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் கூறுகையில், இந்த BLA கிளர்ச்சியாளர்கள் தாலிபான்கள் ஆளும் ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு குழுவின் உதவியுடன் இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்று கூறியுள்ளார். மேலும், இந்த கடத்தலை சுமார் 70 முதல் 80 கிளர்ச்சியாளர்கள் நடத்தி இருக்கலாம் என்றும் அவர் பாகிஸ்தான் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
கிளர்ச்சியாளர்களின் கோரிக்கை :
இந்த ரயில் கடத்தலுக்கு பொறுப்பேற்றுள்ள கிளர்ச்சியாளார்கள் குழுவான BLA, பாகிஸ்தான் அரசுக்கு 48 மணிநேர எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதற்குள் பாகிஸ்தான் இராணுவத்தால் கைது செய்யப்பட்டுளள பலூச் அரசியல் கைதிகள், BLA ஆதரவு ஆர்வலர்கள் மற்றும் BLA பிரிவில் மற்ற நபர்களை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.