வெட்டுக்கிளி, பட்டுப்புழுக்கள் உட்பட 16 பூச்சியினங்களை உணவாக உட்கொள்ள அனுமதி.!
சிங்கப்பூர் : வெட்டுக்கிளிகள், பட்டுப்புழுக்கள் உள்ளிட்ட 16 பூச்சியினங்களை மனிதர்கள் உட்கொள்வதற்குச் சிங்கப்பூரில் உள்ள உணவுக் கழகம் (SFA) ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த மாதிரியான உணவு வகைகள் ஹாங்காங் மற்றும் தாய்லாந்தில் ரோடு கடைகளில் மிகவும் பிரபலமாக விற்கப்படுகிறது.
தற்பொழுது, அந்த பூச்சியினங்களை உணவாக உட்கொள்ள சிங்கப்பூரில் அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த பூச்சி இனங்களை சீன மற்றும் இந்திய உணவுகள் உட்பட உலகளாவிய உணவுகளுடன் சேர்த்து உட்கொள்ள ஹோட்டல்களின் மெனுவில் சேர்க்கப்பட்டுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட பூச்சிகளில் சிள்வண்டுகள், வெட்டுக்கிளிகள், புழுக்கள் மற்றும் பட்டுப்புழுக்கள் ஆகியவை அடங்கும். 30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களே அதிக தைரியத்துடனும், ஆர்வத்துடனும் முன்வந்து இந்த வகை உணவுகளை வாங்கிச் சாப்பிடுவதாக உணவக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்காக, சீனா, தாய்லாந்து நாடுகளிலிருந்து பூச்சிகளை இறக்குமதி செய்யவும் திட்டமிட்டுள்ளது. மேலும், மனிதர்கள் உண்ணக்கூடிய இந்த பூச்சி வகைகளை இறக்குமதி செய்வதற்கும் வளர்ப்பதற்கும் புதிய விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் உணவு ஒழுங்குமுறை ஆணையம் அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் இல்லாத பூச்சி இனங்கள் சாப்பிடுவதற்கு பாதுகாப்பானவை என்பதை உறுதிப்படுத்த மதிப்பீடு செய்ய வேண்டும் என்று SFA கூறியுள்ளது. மேலும், அந்த பூச்சி தயாரிப்புகளும் உணவு பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்படும் என்றும், ஏஜென்சியின் வரைமுறைக்குள் வராதவை விற்பனைக்கு அனுமதிக்கப்படாது என்று SFA தெரிவித்துள்ளது.
கடந்த 2022-ல் இந்த 16 வகை பூச்சி இனங்களை நுகர்வோருக்கு வழங்க அனுமதிப்பது குறித்து SFA ஆலோசனை மேற்கொள்ள தொடங்கியது. ஆரம்பத்தில் 2023 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் அவற்றை அங்கீகரிக்க திட்டமிட்டது, ஆனால் அது சில பல காரணங்களால் பின்னர் 2024-க்கு தள்ளப்பட்டது. இப்பொது அது நிறைவேறி இருப்பதால், சிங்கப்பூரில் சப்ளை மற்றும் கேட்டரிங் செய்து வரும் தொழில்துறை வல்லுநர்கள் மகிழ்ச்சியில் உள்ளதாக தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.