உயரும் பலி எண்ணிக்கை! ஹஜ் யாத்திரையில் 1,300 யாத்ரீகர்கள் கடும் வெயிலால் உயிரிழப்பு.!
ஆசிய நாடுகளில் கடும் வெப்பம் வாட்டி வைத்து வரும் நிலையில், சவுதிஅரேபியாவில் உள்ள புனித மெக்காவில் கடும் வெப்ப அலை நிலவி வருகிறது. மெக்காவில் வெப்பநிலை 125 டிகிரி ஃபாரன்ஹீட்டாக உயர்ந்து சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில், மெக்காவில் ஏற்பட்ட கடும் வெப்ப அலையால் தற்போது வரை உயிரிழந்த ஹஜ் பயணிகளின் எண்ணிக்கை 1,300 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலி எண்ணிக்கை அதிகமாகும் என அஞ்சப்படுகிறது.
அதில், இந்தோனேசியாவைச் சேர்ந்த 165 யாத்ரீகர்களும், இந்தியாவிலிருந்து 98 பேரும், இரண்டு அமெரிக்க யாத்ரீகர்கள் உட்பட ஜோர்டான், துனிசியா, மொராக்கோ, அல்ஜீரியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து சிலர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.
இது குறித்து சவூதி சுகாதார அமைச்சர் ஃபஹ்த் பின் அப்துர்ரஹ்மான் அல்-ஜலாஜெல் கூறுகையில், 1,300 இறப்புகளில் 83 சதவீதம் பேர் அங்கீகரிக்கப்படாத யாத்ரீகர்கள் என்றும், தற்பொழுது 95 யாத்ரீகர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக கூறினார்.
அவர்களில் சிலர் தலைநகர் ரியாத்தில் சிகிச்சைக்காக விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறினார். இறந்த யாத்ரீகர்கள் பலரிடம் அடையாள ஆவணங்கள் இல்லாததால், அடையாளம் காணும் பணியில் தாமதம் ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்.
உயிரிழந்தவர்களில் 660க்கும் மேற்பட்டோர் எகிப்தியர்கள் என்றும், அவர்களில் 31 பேரைத் தவிர மற்ற அனைவரும் அங்கீகரிக்கப்படாத யாத்ரீகர்கள் என்று கெய்ரோவில் உள்ள இரண்டு அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இதனால், அங்கீகரிக்கப்படாத யாத்ரீகர்களை புனித யாத்திரை செல்ல உதவிய 16 பயண நிறுவனங்களின் உரிமங்களை எகிப்து ரத்து செய்துள்ளனர்.