இலங்கையில் உள்ள தமிழர்களுக்காக 10,000 வீடுகள் கட்டுக்கொடுக்கப்பட்டுள்ளது! பிரதமர் மோடி பேச்சு!
இலங்கையில் உள்ள மூன்று கோயில்களை சீரமைக்க இந்தியா உதவும் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

இலங்கை : பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு சென்று இருக்கும் நிலையில், இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. பாதுகாப்பு, சுகாதாரம் உள்ளிட்ட துறைகள் மற்றும் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக இந்தியா – இலங்கை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இலங்கையில் நிகழ்த்திய உரையில், இலங்கையில் உள்ள தமிழர்களுக்காக இந்தியா 10,000 வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளதாகவும், மேலும் மூன்று கோயில்களை சீரமைக்க உதவி செய்யும் என்றும் தெரிவித்தார்.
இந்தியாவில் உள்ள தமிழ் மக்களின் கோரிக்கைகளை இலங்கை பூர்த்தி செய்யும் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தியா-இலங்கை இடையேயான நட்பை வலியுறுத்தி, அவர் திருக்குறளை மேற்கோள் காட்டினார். “செயற்கரிய யாவுள நட்பின், அதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு” என்ற திருக்குறளை எடுத்துரைத்த மோடி, நட்பை விட கடினமான செயல் எதுவுமில்லை என்றும், பாதுகாப்புக்கு தேவையான செயலை விட கடினமான செயல் எதுவுமில்லை என்றும் விளக்கினார்.
நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி ” இலங்கையில் உள்ள தமிழர்களுக்காக 10,000 வீடுகளை இந்தியா கட்டிக் கொடுத்துள்ளது. இலங்கையில் உள்ள மூன்று கோயில்களை சீரமைக்க இந்தியா உதவும். இந்தியாவில் உள்ள தமிழ் மக்களின் கோரிக்கைகளை இலங்கை பூர்த்தி செய்யும் என நம்புகிறேன்.
பாதுகாப்புக்குத் தேவையான செயலை விடக் கடினமான செயல் எதுவுமில்லை என்றும் சொல்ல விரும்புகிறேன். தீவிரவாத தாக்குதல், கொரோனா, பொருளாதார பிரச்சினையில் இலங்கை தவித்தபோது இந்தியா துணை நின்றது. இலங்கை அதிபராக திசநாயக பதவியேற்ற பின் முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியாவை தேர்வு செய்தார். இந்தியா-இலங்கை நாடுகள் இடையேயான உறவு மிகவும் நன்றாக உள்ளது” என தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து “மீனவர்களின் வாழ்வாதார பிரச்னை குறித்து நாம் பேசினோம். மனிதாபிமான அடிப்படையில் மீனவர்கள் பிரச்னையை அணுகுவதற்கு இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளோம். கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்கவும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை திருப்பி அனுப்பவும் நாம் வலியுறுத்தியுள்ளோம்” எனவும் பிரதமர் மோடி பேசியுள்ளார்.