ஈராக்கில் புதிதாகப் பிறந்த 100 குழந்தைகளுக்கு “நஸ்ரல்லா” என்று பெயர் சூட்டல்.!
ஈராக்கில் நாடு முழுவதும் சுமார் 100 குழந்தைகள் "நஸ்ரல்லா" என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈராக்: ஹிஸ்புல்லா அமைப்பை முற்றிலுமாக அழிக்க இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையில் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இஸ்ரேல் ஹெஸ்புல்லா தலைவரைக் கொன்ற பிறகு, மேலும் 100 சையது ஹசன் நஸ்ரல்லா பிறந்துள்ளதாக ஈராக்கின் சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.
இஸ்ரேல் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் 46 பேர் கொல்லப்பட்டதாக லெபனான் அரசு தெரிவித்துள்ளது. லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிராக கடந்த சில நாள்களாக அங்கு வான்வழி தாக்குதலை நடத்தி வந்த இஸ்ரேல், நேற்று முன்தினம் முதல் தரைவழி தாக்குதலை நடத்தி வருகிறது.
இஸ்ரேல் மீது ஈரானின் தாக்குதல் தொடர்ந்து, இஸ்ரேல் ராணுவம் நேற்று லெபனானில் தரைவழி தாக்குதலை தீவிரப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, கடந்த மாதம் லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தும் நூற்றுக்கணக்கான பேஜர்கள் மற்றும் வாக்கி டாக்கிகள் ஒரே சமயத்தில் வெடிக்க செய்யப்பட்டன.
இதில் 39 பேர் பலியான நிலை யில் சுமார் 4 ஆயிரம் பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் நேரடியாக பொறுப்பேற்கவில்லை என்றாலும் இஸ்ரேல்தான் இந்த தாக்குதலை நடத்தியது என பரவலாக நம்பப்படுகிறது.
அதன் ஒரு பகுதியாக கடந்த வாரம் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடத்தப்பட்ட வான்தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். இவர், அரபு நாடுகளில் இஸ்ரேலிய மற்றும் மேற்கத்திய செல்வாக்கிற்கு எதிரான எதிர்ப்பின் அடையாளமாக பலரால் பார்க்கப்பட்டார்.
மேலும் ஈராக்கில், குறிப்பாக நாட்டின் பெரும்பான்மையான ஷியா சமூகத்தில் குறிப்பிடத்தக்க பின்தொடர்பவர்களைக் கட்டளையிட்டார். ஈராக் உடனான நஸ்ரல்லாவின் உறவுகள் மதம் மற்றும் அரசியல் சித்தாந்தம் இரண்டிலும் வேரூன்றிய ஆழமானது என சொல்லப்படுகிறது.
இப்படி இருக்கையில், லெபனானின் பெய்ரூட்டில் இஸ்ரேலால் ஹிஸ்புல்லா தலைவர் கொல்லப்பட்ட பிறகு, புதிதாகப் பிறந்த நூறு குழந்தைகளுக்கு “நஸ்ரல்லா” என்று பெயரிடப்பட்டுள்ளது என்று ஈராக்கின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
‘எதிர்ப்பின் தியாகியின் நினைவாக’ இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அரபு நாடுகளில் ‘நஸ்ரல்லா’ என்ற பெயருக்கு தனி முக்கியத்துவம் உண்டு. இதற்கு ‘கடவுளின் வெற்றி’ என்று பொருளாம்.