ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை உடனடியாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் …!தினகரன்
ஜாக்டோ, ஜியோ அமைப்பினரை உடனடியாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அமமுக துணைப்பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 4ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்தனர். இதனையடுத்து சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் அந்த அமைப்பினருடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.அரசு நடத்திய பேச்சில் உடன்பாடு ஏற்படாததால் சென்னையில் நேற்று ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் உயர்நிலை குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவித்தனர்.
ஆனால் “ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட வேண்டும்” முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார்.புயல் நிவாரண பணிகளுக்கு தொய்வு ஏற்படாமல் இருக்க அரசு ஊழியர்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.ஜாக்டோ ஜியோ கோரிக்கைகள் குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார்.
இதன் பின்னர் நேற்று சென்னை திருவல்லிக்கேனியில் ஜாக்டோ – ஜியோ உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டம் முடிந்த பின்னர் ஜாக்டோ – ஜியோ ஒருங்கிணைப்பாளர் மாயவன் கூறுகையில்,திட்டமிட்டபடி டிசம்பர் 4 ஆம் தேதி முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடைபெறும். புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளிலும் வேலைநிறுத்தம் நடைபெறும். டிசம்பர் 6 ஆம் தேதிக்குள் முதல்வரே எங்களை அழைத்து பேசினால் ஸ்டிரைக்கை கைவிடுவது பற்றி பரிசீலனை செய்யப்படும். பேச்சு நடத்தாவிடில் டிசம்பர் 7 ஆம் தேதி முதல் போராட்டம் தீவிரமடையும்.ஜெயலலிதா நினைவு நாளான டிசம்பர் 5 ஆம் தேதியும் அவரது படத்தை கையில் ஏந்தியும், டிசம்பர் 7 ஆம் தேதி மாவட்ட அளவில் மறியல் போராட்டமும் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில் அமமுக துணைப்பொதுச்செயலாளர் தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,ஜாக்டோ, ஜியோ அமைப்பினரை உடனடியாக அழைத்து முதலமைச்சர் பழனிசாமி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.