#BREAKING: யூடியூபர் மதன் ரவிச்சந்திரன் பாஜகவில் இருந்து அதிரடி நீக்கம் ..!
யூடியூபர் மதன் ரவிச்சந்திரன் மற்றும் வெண்பாவை பாஜகவில் இருந்து நீக்கியதாக பாஜக மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.
பாஜகவின் மாநில பொதுச் செயலாளராக இருந்த கே.டி. ராகவன் பெண்ணிடம் ஆபாசமாக நடந்து கொண்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. கே.டி. ராகவனுக்கு பல்வேறு தரப்பினர் தங்கள் கண்டனங்கள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து பொதுச் செயலாளர் பொறுப்பை ராஜினாமா செய்வதாக கே.டி.
ராகவன் அறிவித்தார்.
மதன் ரவிச்சந்திரன் என்ற யூ-டியூபர் கே.டி.ராகவன் தொடர்பான வீடியோவை ‘Madan Diary’ என்ற யூ-டியூப்பில் வெளியிட்டார். இந்நிலையில், யூடியூபர் மதன் ரவிச்சந்திரன் பாஜகவில் இருந்து நீக்கியதாக பாஜக மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பத்திரிக்கையாளர் மதன் ரவிச்சந்திரன் மற்றும் வெண்பா ஆகியோர் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் திரு. K. அண்ணாமலை Ex IPS அவர்களை சந்தித்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள நடவடிக்கை குழுவிற்கு ஒத்துழைப்பு கொடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.
அதே வேளையில் பாரதிய ஜனதா கட்சியின் கொள்கைகளுக்கு முரணாக வீடியோ பதிவில் கருத்துக்கள் தெரிவித்துள்ள மதன் ரவிச்சந்திரன் மற்றும் வெண்பா ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்படுகிறார்கள். ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், அவர்களிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்போடர் மாதம் மதன் ரவிச்சந்திரன் டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார்.
பாஜகவில் உள்ள பல தலைவர்களின் வீடியோக்களும் இனி வரும் நாள்களில் வெளியாகும் என மதன் ரவிச்சந்திரன் தெரிவித்து இருந்த நிலையில், மதன் ரவிச்சந்திரனின் ‘Madan Diary’ என்ற யூ டியூப் சேனல் இன்று முடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.