நெல்லை நீதிமன்றம் முன்பு இளைஞர் வெட்டிக்கொலை! 6 பேர் கைது!
கொலைக்கு பயன்படுத்திய கேரளா பதிவு எண் கொண்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டு தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது.
நெல்லை : இன்று தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஆழ்த்தும் வகையில் அதிர்ச்சியான சம்பவம் திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்துள்ளது. பட்ட பகலில் நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பு மாயாண்டி என்பவரை 7 பேர் கொண்ட ஒரு கும்பல் வெட்டி கொடூரமாக கொலை செய்தது. வழக்கு விசாரணைக்கு வந்த மாயாண்டியை நீதிமன்ற வளாகம் முன்பு அந்த கும்பல் வெட்டி கொலை செய்தது அந்த பகுதியில் பெரும் பரப்பை ஏற்படுத்தியது.
நெல்லை மாவட்டம் கீழநத்தம் பகுதியைச் சேர்ந்த மாயாண்டியை வெட்டிக் கொலை செய்து ஒரு கும்பல் காரில் தப்பிச் சென்ற நிலையில், 2 மணி நேரத்தில் மொத்தமாக 6 பேரை போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே, ராமகிருஷ்ணன், சுரேஷ், மனோஜ் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது சிவா, தங்க மகேஷ், மனோ ராஜ் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். முதலில் பிடிபட்ட ராமகிருஷ்ணனை தனி இடத்தில் வைத்து தனிப்படை விசாரித்து வருகிறது.
அது மட்டுமின்றி, இந்த கொலைக்கு பயன்படுத்திய கேரளா பதிவு எண் கொண்ட ஒரு காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தற்போது இவர்களிடம் தீவிரமான விசாரணையும் நடைபெற்று வருகிறது. முதற்கட்ட விசாரணையில் கடந்த ஆண்டு கீழநத்தம் பஞ்சாயத்து வார்டு உறுப்பினராக இருந்த ராஜாமணி என்பவர் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்குப்பழியாக மாயாண்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்திருக்கிறது.