உங்களின் வெற்றிக் கதை இளம் பெண்களுக்கு உத்வேகம்.. தங்கம் வென்ற ஷரீனுக்கு முதல்வர் வாழ்த்து!
உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் தங்க பதக்கம் வென்ற ஷரீனுக்கு வாழ்த்து கூறிய முதலமைச்சர்.
துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நகரில் 12-வது பெண்கள் உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டி நேற்று நடைபெற்றது. இதில் 52 கிலோ எடைப் பிரிவில் இந்திய அணி சார்பாக 25 வயதாகும் நிகாத் ஷரீன் இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தார். நேற்று நடைபெற்ற உலக மகளிர் குத்துச்சண்டை இறுதிப்போட்டியில் நிகாத் ஷரீன், தாய்லாந்து வீராங்கனை ஜூடாமாஸ் ஜிட்பாங்குவை எதிர்கொண்டார் .
இந்த போட்டியில் 5-0 என்ற கணக்கில் இந்திய வீராங்கனை நிகாத் ஷரீன் வெற்றி பெற்று தங்க பதக்கத்தை தட்டி சென்றார். இதன் மூலம் மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற ஐந்தாவது இந்திய வீராங்கனை ஆவார். இவருக்கு முன்னதாக மேரி கோம், சரிதா தேவி, ஜென்னி, லேகா ஆகிய வீராங்கனைகள் தங்கப்பதக்கம் வென்றிருந்தன. மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் தங்க பதக்கம் வென்ற நிகாத் ஷரீனுக்கு அரசியல் தலைவர்கள் உள்பட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில், தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின், தங்க பதக்கம் வென்ற நிகாத் ஷரீனுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் உங்கள் அசத்தலான மற்றும் தகுதியான தங்கப் பதக்கத்திற்கு வாழ்த்துகள் நிகாத் ஷரீன். நிஜாமாபாத் முதல் இஸ்தான்புல் வரையிலான உங்களின் வெற்றிக் கதை, பல இளம் பெண்களுக்கு தங்கள் கனவுகளை நம்பிக்கையுடனும் உறுதியுடனும் பின்பற்ற இது ஒரு சிறந்த உத்வேகமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
Congratulations @nikhat_zareen on your stunning and well-deserved Gold medal at Women’s World Boxing Championship.
Your success story from Nizamabad to Istanbul will be a great inspiration for many young girls to follow their dreams with hope and determination. pic.twitter.com/U91rCjsTyz
— M.K.Stalin (@mkstalin) May 20, 2022