உங்கள் காலம் நிறைவேறும் காலம் – முதலமைச்சர் புகழஞ்சலி
கலைஞர் நினைவு நாளை முன்னிட்டு, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள கலைஞர் சிலை அருகே வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதன்பின் கலைஞர் சிலையில் இருந்து மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடம் வரையில் அமைதி பேரணி நடைபெற்றது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இப்பேரணியில், அமைச்சர்கள், திமுக எம்.பி.க்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதனிடையே, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவுதினத்தையொட்டி உங்கள் கனவுகள் நிறைவேறும் எனும் தலைப்பில் முதலமைச்சர் முக ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தினார். முதல்வர் கூறுகையில், உங்களை காண இன்று அதிகாலையில் அணிவகுத்து வருகிறோம். உங்கள் கனவுகளை எல்லாம் நிறைவேற்றி வருகிறோம்.
நீங்கள் இருந்து செய்யவேண்டியதை தான் நான் அமர்ந்து செய்து கொண்டிருக்கிறேன். இனம், மொழி, நாடு காக்க ஓய்வெடுக்காமல் 95 வயது வரை நாள்ளெல்லாம் உழைத்தீர்கள். உங்கள் உழைப்பின் உருவக வடிவம்தான் இந்த நவீன தமிழ்நாடு. நீங்கள் உருவாக்கிய நவீன தமிழ்நாட்டை இடையில் புகுந்த கொத்தடிமைகள் கூட்டம் சிதைத்ததால் தாழ்வுற்றது தமிழ்நாடு.
தாழ்வுற்ற தமிழ்நாட்டை மீட்டெடுத்து மீண்டும் உங்கள் ஆட்சிகாலமாக உருவாக்க எந்நாளும் உழைத்து வருகிறேன். 8 கோடி மக்கள் ஏதாவது ஒரு வகையில் பயன்டையும் வகையில் திட்டத்தை தீட்டி ஆட்சியை மக்களாட்சி மாண்போடு நடத்தி வருகிறோம். எனவே, தமிழ்நாடு இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக உயர்கிறது. உங்கள் கனவுகள் நிறைவேறும் காலமாக ஆகிவிட்டது. சுயமரியாதை, சமூக நீதி, இன உரிமை, மாநில சுயாட்சி என்ற உங்கள் கனவுகளை இந்தியா முழுவதும் அகலமாக விரித்துள்ளோம்.
அனைத்து மாநிலங்களுக்கும் உரிமை பெற்று தரும் கட்சியாக இருக்க வேண்டும் என்ற உங்கள் கனவு நிறைவேறும் காலம். தமிழகத்தில் கால்பதித்த பின்பு இந்தியாவுக்காக குரல் எழுப்ப வேன்றுமென்று நீங்கள் சொல்வீர்கள். அப்படித்தான் தற்போது india -வுக்கான குரலை எழுப்ப தொடங்கி இருக்கிறோம். அனைத்துக்கும் தொடக்கம் தமிழ்நாடு, india -வுக்கான பாதை அமைத்தது தமிழ்நாடு. இந்தியாவில் ஜனநாயகம் இருக்க வேண்டுமா? இருக்க முடியாதா? என்பதற்கான நாடாளுமன்ற தேர்தல் வருகிறது என முதல்வர் கூறியுள்ளார்.