“வாய் இருக்குனு ஏதேதோ பேச கூடாது”…சீமான் பேச்சுக்கு பிரேமலதா கண்டனம்!
வாய் இருக்குனு ஏதேதோ பேச கூடாது என சீமான் பேச்சு பிரேமலதா விஜயகாந்த் காட்டத்துடன் கண்டனத்தை தெரிவித்திருக்கிறார்.
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது தந்தை பெரியார் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை பதிவிட்டார். அதிலும், தந்தை பெரியார் உடல் இச்சை பற்றி கூறியதாக சீமான் கூறிய கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் கடும் எதிர்வினைகளை உண்டாக்கியுள்ளது.
சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பல்வேறு அரசியல் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு காவல் நிலையங்களில் அவர் மீது புகார்கள் பதிப்பட்டு வருகின்றன.
அதே சமயம், சீமான் பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் சீமான் பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் கூறிய அவர்”சீமான் ஒரு கருத்தை பதிவு செய்தார் என்றால் அதற்கு நான் எப்படி பதில் சொல்ல முடியும்? அவர் ஒரு கருத்து வைத்தால் அதற்கு அவர் தான் பதில் சொல்லவேண்டும்.
பெரியார் என்பவர் யார் என்று உலகத்திற்கு தெரியும் தமிழக மக்களுக்கு தெரியும். தமிழக மக்களுக்கும் தெரியும். அவர் வாழ்ந்து அவருடைய சரித்திரத்தை நிரூபித்து இறந்துவிட்டார். இறந்து போனவர்களை பற்றி ஏன் இப்போது பேசி அரசியல் ஆக்குகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. அவர் இருந்த காலங்களில் சரித்திரங்கள் படைத்துவிட்டு சென்றார். அதனை இல்லை என்று யாரவது சொல்லமுடியுமா?
நமக்கு வாய் இருக்கிறது என்று ஏதேதோ பேசக்கூடாது…கொச்சையாகவும் பேசக்கூடாது. வாழ்ந்து மறைந்த தலைவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மறைந்த பிறகு அவர்களை பற்றி தவறாக பேசும் கருத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம். எனவே, சீமான் சொன்ன கேள்விகள் மற்றும் அவருடைய பேச்சுக்கு நீங்கள் அவரிடமே பதில் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்” எனவும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.